போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. அதனால் அப்டேட் கேட்டு அவ்வப்போது ஏதாவது ஒரு ஹேஷ்டேகை ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராதது ரசிகர்களை கவலை அடைய செய்தது. வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள். 

கடைசியாக அஜித் தன் வலிமை குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அது படக்குழு வெளியிட்டது இல்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்தனர்.  அந்த புகைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் மிக இளமையாக இருந்தார் அஜித். 

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது. 

வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் துவங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. 

படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வில்லனான கார்த்திகேயாவிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது வெளியாகும் என ஏர்போர்டில் வைத்து கேட்டுள்ளார். அதற்கு அவர் மிக விரைவில் வெளியாகும் என பதில் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.