பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்றும், பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

தமிழகத்தை உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மிரட்டல் வழக்கு. இதனால், பொள்ளாச்சி பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகளின் பெற்றோர் தற்போது வரை கடும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாத துயரத்தில் இருக்கின்றனர்.

அதாவது, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால், பதறிப்போன மாணவிகளின் பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன் பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இந்த வழக்கில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் நேற்றைய தினம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். 

அதில், கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் முக்கிய விசாரணை நடத்தினர். 

இதில், கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்து வந்தார். 

இதையடுத்து, அந்த 3 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 

மிக முக்கியமாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக தற்போது மேலும் இரு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக பேசிய சிபிஐ அதிகாரிகள், “இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில், மேலும் சிலர் மீது கைது நடவடிக்கைகள் இருக்கலாம்” என்றும் கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாகா, “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் அரசியல்வாதியாக இருக்கிறார். அதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளின் தொடர்பை பற்றி அம்பலப்படுத்தினாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்றும், முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறி உள்ளார். 

“இந்த வழக்கில் நிறைய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அதில் உள்ள நபர்களை கைது செய்து தாமதிக்காமல் விரைந்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால், இந்த வழக்கில் மேலும் சிலர் என்று கூறப்படுவது அரசியல்வாதியாக இருக்கலாம் என்றும், அப்பகுதியில் ஒரு செய்திகள் உலா வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும், விசாரணை அரசியல் தலையீடின்றி நேர்மையாக நடைபெற வேண்டும்” என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.