“10 ஆம் தேதி ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதா தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில். “ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று, ரசிகர்களுக்கு மன்ற நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்” என்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்து, அது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ஏமாற்றம் அடைந்ததுடன், பலர் கண்ணீர் விட்டு அழவும் செய்தனர். அத்துடன், “இறப்பு என்னைத் தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

மேலும், “நடிகர் ரஜினிகாந்த், தனது முடிவை மாற்றி அரசியலுக்கு வர வேண்டும்” என்று, அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், “தமிழ்நாடு மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி இருப்பதாக” அவருடன் பயணித்த அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வரவழைக்கும் முயற்சியாக வரும் 10 ஆம் தேதி சென்னையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி 
வி.எம்.சுதாகர், மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “தன்னுடைய உடல் நிலை குறித்தும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறியும் அரசியலுக்கு வந்தால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தையும், தான் அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து நம் அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் வெளிப்படையான, தெளிவான அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார்” என்று, குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், “அதன் பிறகும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்துவதற்காகப் போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசி வருவது அவரை மேலும் நோகடிக்க செய்யும் செயல்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“இந்த போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி, நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது மிகவும் வருந்தத்தக்கது. நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று, தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று, வி.எம்.சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கடிதம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.