கன்னடத்தில் யஷ் நடித்து உருவான, கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது.

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த யஷ், ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். ரவீனா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தை அடுத்து பிரசாந்த் நீல், சலார் என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரபாஸ் ஹீரோ. இந்தப் படத்தையும் கே.ஜி.எஃப் படங்களை தயாரிக்கும் ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதன் ஷூட்டிங்கை கோலார் தங்க வயலில் தொடங்க முடிவு செய்திருந்தனர். பின்னர் அந்த லொகேஷனை மாற்றினர்.

தெலங்கானாவில் உள்ள கோதவரிகணி நிலக்கரி சுரங்கங்களில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது நக்சலைட்டுகள் அதிகமாக உள்ள பகுதி என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இதன் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன், ராமகுண்டன் போலீஸ் கமிஷனர் வி. சத்யநாராயணாவை சந்தித்த நடிகர் பிரபாஸ், மற்றும் படக்குழுவினர் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, சுமார் 40 போலீசார், படப்பிடிப்புக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நக்சலைட் மிரட்டல் காரணமாகவே பிரபாஸ் போலீஸ் பாதுகாப்பு கேட்டதாகவும் இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் தெலங்கானாவில் செய்திகள் வெளியாகி உள்ளன.