தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.1980 முதல் 1990 வரை அவர் இல்லாத படங்கள் குறைவு. அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்தார் சில்க். இவர் கடந்த 1996-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் மறைந்தாலும் இவர் நடித்த படங்கள், பாடல்கள் மூலம் இன்னும் ரசிகர்களின் நினைவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் சில்க். 

தற்போது தமிழில் நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உருவாகி வருவதாக செய்திகள் வெளியானது. காயத்ரி பிலிம்ஸ் சார்பில் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் சார்பில் எச்.முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இதை இயக்குகிறார். இதில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க பல நடிகைகளிடம் பேசி வந்தனர்.

இந்நிலையில் சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடிகை அனசுயா தான் நடிக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் வேகமாக பரவியது. ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றுள்ள அனசுயா, தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புது துவக்கங்கள், கோலிவுட் என்று தெரிவித்தார். அதை பார்த்தவர்கள் அனசுயா தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என்று முடிவே செய்துவிட்டார்கள்.

தன்னை பற்றி பலரும் பேசிக் கொண்டிருப்பதை அறிந்த அனசுயா, நான் சில்க் ஸ்மிதாகாருவாக எந்த பயோப்பிக்கிலும் நடிக்கவில்லை. நன்றி என ட்வீட் செய்துள்ளார். இதனால் கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தி டர்ட்டி பிக்சர் என்கிற பெயரில் இந்தியில் படமாக்கினார்கள். அதில் வித்யா பாலன் சில்காக நடித்திருந்தார். படத்தை பார்த்தவர்கள் சில்க் ஸ்மிதாவின் ஸ்பெஷலே அவரின் கண்கள் தான், வித்யா பாலனிடம் அது இல்லை என்ற கருத்தை முன்வைத்தார்கள். தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை ஒழுங்காக காட்டவில்லை என்கிற புகார் எழுந்தது.