இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் புரட்சியில், “அதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிக்க முடிவு” செய்து, கொட்டும் பனியிலும் தலைநகர் டெல்லியில் 15 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
 
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில் 15 வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

விவசாயிகளுடன் இது வரை 5 கட்டங்களாக மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று 6 ஆம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள 6 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதனால், “நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, “விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது” என்று கூறினார். 

அத்துடன், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவரை சந்தித்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “வேளாண் சட்டங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால், அவற்றை திரும்பப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குடியரசுத் தலைவரிடம் மனு அளித்ததாகக் கூறினார்.

குறிப்பாக, கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வரும் 12 ஆம் தேதி டெல்லி, ஜெய்பூர் மற்றும் டெல்லி, ஆக்ரா நெடுஞ்சாலைகளை முற்றுகையிடுவோம் என்றும், சுங்கச்சாவடி வழியாக
செல்லும் பொது மக்களின் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் விவசாயிகள் அரணாக நிற்கும் என்றும் விவசாய சங்கங்கள் தற்போது
அறிவித்துள்ளன. 

மேலும், நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பாக வரும் 14 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.

அதே போல், “மற்ற மாநில விவசாயிகளும், டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்றும், அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முக்கியமாக, “பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் அலைபேசி, சிம்கார்டுகள் மற்றும் இணைய வசதிகள் என ரிலையன்ஸ்
நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும், புறக்கணிக்கப்படும்” என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன், அதானி தயாரிப்புகளையும் புறக்கணிப்பு செய்வோம்” என்றும், டெல்லியில் போராடும் விவசாயிகள் அதிரடியாக அறிவித்து உள்ளனர். இதற்கு, இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.