சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’’ ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி முடிவு செய்வார்.

பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் இன்றைக்கு எங்கேயோ சென்றிருப்பார். அன்றைக்கிருந்த ரஜினியின் ஸ்டைல் வேறு. இன்றைக்கு அவருக்கு வயதாகிவிட்டது. கட்சி ஆரம்பித்தபிறகுதான் அவரின் கொள்கைகள் தெரியும். 


எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி இப்போது சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்கள் கொள்கைகள், தலைவர்களை ரஜினிக்கு பிடித்திருக்கலாம். அதனால் அவர் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். 


அதிமுக பல திட்டங்களை கொண்டு வந்ததிருக்கிறது. நாங்கள் போட்ட சாலைகளில் சென்றுகொண்டே எங்களை குறை சொல்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக கூட்டணிக் கட்சிகளிடத்தில் ஒருங்கிணைப்பு கிடையாது. ஸ்டாலின் பின்னால் இருப்பவர்கள் கூட அவரை வெறுக்கிறார்கள். ஸ்டாலின் எங்கள் தலைவரை ஒருமையில் பேசுகிறார், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். நாங்கள் எந்த ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை வர்கள்தான் முடிவு செய்பவர்கள்.


ஈபிஎஸ் - ஓபிஎஸ் மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களை துன்புறுத்தி அதில் நாங்கள் இன்புற மாட்டோம். அதிமுக ஆன்மிக கட்சி.  அ.தி.மு.க ஆன்மிக அரசியலைத்தான் வழிநடத்தி வருகிறது. இங்கே ஆன்மிகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். எம்மதமும் எங்களுக்குச் சம்மதம். அதனால் அ.தி.மு.க ஓர் ஆன்மிக கட்சி. எங்கள் ஆட்சி ஆன்மிக ஆட்சி " என்று பேசியுள்ளார்.