கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் தங்களை பெரும்பாக்கம் போன்ற தொலைதூரத்தில் மறுகுடியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து சத்தியவாணிமுத்து நகர் மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூவம் ஆற்றில் இறங்கி 13 பேர் உயிர் விடுவோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இயக்குனர் பா.இரஞ்சித் அவர்கள் நேரில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். 


பள்ளிகள், அரசு பொது மருத்துவமனை, வேலைவாய்ப்பு, ரயில் போக்குவரத்து ஆகியவை எங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே இருக்கிறது. மறுகுடியமர்வு என்ற பெயரில் எங்களை பெரும்பாக்கத்துக்கு போக சொல்கிறார்கள்.அதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படும். புளியந்தோப்பு, மூலகொத்தளம், காசிமேடு போன்ற பகுதிகளில் மட்டுமே மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என நாங்களும் கேட்டு வருகிறோம் ஆனால் அதற்கு பதில் இல்லை.  இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்கிறார்கள் சத்தியவாணிமுத்து நகர் மக்கள்.


" எந்த ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடும் செய்யாமல் திடீரென்று வந்து வீட்டினை இடிப்பது மிகப்பெரிய துரோகம். 374 குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். சட்டரீதியாக ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியிலிருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும்.
ஆனால் ஆளும்கட்சியினர் சென்னையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும் தான் சரியாக செய்து வருகின்றது. தமிழக அரசுக்கு சென்னையில் சேரி வாழ் மக்களை அகற்றுவதே வேலையாக உள்ளது. இந்த கொரோனா தொற்று காலத்திலும் அரசு இவர்களை வஞ்சிப்பது வேதனையாக இருக்கிறது என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்

மேலும் அவர், ‘’தமிழகத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தலித் மக்களுக்கு யார் துணையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்று ஒட்டுமொத்த மக்களும் கோரிக்கை விடுப்போம். தலித் மக்களுக்கு தங்களின் வாக்குகள் மட்டுமே ஆயுதம். வாக்குக்காக மட்டும் வருகிற அரசியல் கட்சிகள் எங்கள் பாதிப்புக்கு ஏன் வருவதில்லை? இந்த மக்களின் அழுகைக்கு உங்களின் பதில் என்ன? ” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.


இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ’’ கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள்; பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்?; மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என்று பதிவு செய்து தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.