சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. இதனால், தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான கட்சிகள் தங்களது பிரச்சாரங்களைத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, அரசியலுக்கு வருவதாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசியல் பணிகள் குறித்து சில முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், அவரது உடல் நிலை கருதி, அவர் சற்று அமைதியாக இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம், அவர் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். 

அதன் படி, வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை முறையாக வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அத்துடன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனையும் நடிகர் ரஜினிகாந்த் நியமித்து இருந்தார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீரென்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, புதிதாகத் தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 

மேலும், “தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரன் ஆகியோரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது” என, ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியைப் பதிவு செய்வது தொடர்பாக வழக்கறிஞர் குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென்று ஆலோசனை மேற்கொண்டார் என்றும், கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி ஆகியோருடன் நேற்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில், “புதிய கட்சியை எங்கு தொடங்குவது, மாநாட்டை எங்கு அமைப்பது?” உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  

குறிப்பாக, “ரஜினி இன்று முக்கிய ஆலோசனையில் கூட்டணியா? தனித்துப் போட்டியா?” என்பது பற்றி ஆலோசிக்கலாம், என்றும் கூறப்படுகிறது.

அதே போல், நாளை மறுநாள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இன்று விவாதிக்கப்படலாம் என்றும், கூறப்படுகிறது. 

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து தனது அரசியல் பயணம் குறித்துத் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவது, அவரது ரசிகர்கள் மத்தியில் 
உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.