டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் 2 வது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோது விளையாடியது. 

துபாயில் நடைபெறும் இந்த அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகம்மது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கினர். 

இருவரும் தங்களது அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.  இதனால், அந்த அணி விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடிய நிலையில், 10 வது ஓவரில் பாகிஸ்தான் அணி 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் விக்கெட்டை இழந்தது.

அதாவது, 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசம், சம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஃபக்கர் ஷமாம் களமிறங்கிய நிலையில், அவர் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 

மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகம்மது ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த ஆசிப் அலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி சற்று தடுமாறியது. 

அத்துடன், ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடிய ஃபக்கர் ஷமாம் இறுதியில் அதிரடியாக விளையாடினார். ஸ்டார்க்கின் பந்து வீச்சைச் சிறதடித்த அவர், கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 

இதன் மூலமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு, 176 ரன்கள் சேர்த்தது. 

இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஃபின்ச்சின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது. 

பின்னர், டேவிட் வார்னரும், மிட்செல் மார்ஸும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டு சிறப்பாக விளையாடினார்கள்.

அதன்படி, மார்ஸ் 28 ரன்களில் அவுட்டாக, அதன் பிறகு வந்த ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 

அந்த நேரத்தில், 49 ரன்கள் சேர்த்திருந்த வார்னர் முக்கியமான கட்டத்தில் தனது விக்கெட்டை இழந்தார். 

இப்படியாக, இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸ் - மேத்யூ வேட் தங்களது அணியின் ஸ்கோரை நிதானமாக விளையாடி சற்று உயர்த்தினர். 

அப்போது, கடைசி 9 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், மேத்யூ வேட் ஹாட்ரிக் சிஸ்கர்களை பறக்க விட்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இதனால், டி20 உலகக் கோப்பை தொடரின் 2 வது அரையிறுதியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக, பாகிஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

இதனையடுத்து, நாளை மறுதினம் நடைபெறும் டி20 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொண்டு களம் காண்கிறது.