விராட் கோலி கேப்டன்ஷிப்பின் கடைசி ஆட்டத்தில் நம்பியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி, டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை இழந்து ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளன.

அதே நேரத்தில், இந்த முறை டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு தான் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, தொடர்ந்து முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவி, 2 வெற்றிகளை மட்டுமே பெற்று ஏமாற்றத்தை கொடுத்தது. 

இதனால், இந்த தொடரில் இந்திய அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேற்று இரவு நம்பியாவை எதிர்கொண்டு மோதியது. 

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில், விராட் கோலிக்கும் டி20 அணி கேப்டனாக இது கடைசி போட்டியாக அமைந்து போனது, இதற்கு பிறகு ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ராகுல் சஹார் சேர்க்கப்பட்டார். 

3 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. இதனால், இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த ராகுல் சஹார் கொண்டு வரப்பட்டார். 

2 வது பிரிவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில், இந்திய அணிக்கு இந்த போட்டி வெறும் சம்பிரதாயமான ஆட்டமாகவே இருந்தது. 

அதன்படி, களமிறங்கிய நமீபியா அணியில் ஓப்பனிங் சற்று நன்றாக தொடங்கினாலும், நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஓப்பனிங் வீரர் பார்ட் 21, மைக்கேல் 14 என அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன. வந்த வீரர்களுகம் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். 

இதனால், 20 ஓவர்கள் முடிவில் நமிபியா அணி 8 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பரீத் பும்ரா தனது பங்கிற்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர், 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா - கே.எல் ராகுல் நல்ல தொடகத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இதனால், எதிர் அணியின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். போட்டியில், 37 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டிற்கு கோலி களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.  மறுமுணையில் நின்று விளையாடிய கே.எல். ராகுல் 54 ரன்கள் விளாசினார். எனினும் சூர்யகுமார் யாதவ் கடைசி நேர அதிரடி காட்ட 15.2 ஓவர்களிலேயே இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப் பிடித்து எளிதில் வெற்றி பெற்றது. 

இதனால் இந்த தொடரில் 3 வெற்றிகளை பெற்ற போதும் அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை என்கிற சோகம் இந்திய ரசிகர்களை ஆட்கொண்டது.

இதனிடையே, தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ரவிசாஸ்திரிக்கும் இது கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.