கல்லறையில் உடல் நிலையால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து கிடந்த நபரை பெண் போலீஸ் ஒருவர் தனது தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இந்த நிலையில்,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கன மழை தற்போது வரை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. 

இந்த கன மழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான மக்கள் பலருக்கும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலரது வீடுகளிலும் செல்லம் சூழ்ந்து உள்ளது.

இவற்றுடன், சென்னையில் தெருவோரங்களில் வசிப்போருக்கு இந்த மழை கடும் சேதத்தையும், பெரும் அவதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால், தெருவோரங்களில் வசிக்கும் மக்கள் பலரும், கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கி தங்களின் உயிர் வாழ்ந்தால் போதும் என்கிற நிலையில் தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். 

அப்படியான இந்த சூழலில், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர், இந்த கனமழையால் அங்குள்ள கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்து வந்திருக்கிறார்.

மேலும், கன மழை தொடர்ந்த அதிகரித்த காரணத்தால், கல்லறையில் தங்கியிருந்த உதயாவின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, அவர் அந்த கல்லறைத் தோட்டத்தை விட்டு வெளியே வரமுடியாமல், அங்கேயே மயக்கமாகி விழுந்திருக்கிறார்.

அவரை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த டி.பி. சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எந்த வித தயக்கமுமின்றி, அந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று முறிந்து விழுந்த மரங்களை அகற்றிவிட்டு, மயங்கிக் கிடந்த உதயாவை தூக்கி தனது தோளில் படுக்க வைத்துக்கொண்டு, சுமந்து வந்திருக்கிறார். 

இதனையடுத்து, அங்கு கல்லறைக்கு வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏற்றி, அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். 

அந்த பெண் போலீஸ் அதிகாரி, மயங்கிய நிலையில் கிடந்தவரைத் தனது தோழில் சுமந்து சென்றதை, அங்கிருந்தவர்கள் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டனர். 

இதனால், இந்த காட்சிகள் யாவும் இணையத்தில் வைரலான நிலையில், பெண் போலீசார் ஒருவர், ஆண் ஒருவரைத் தனது தோழில் சுமந்து செல்லும் காட்சியானது, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.