சென்னையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 21 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 17 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

இந்த கனமழையால், சென்னையில் பெரும்பாலன இடங்கிளல் மழை நீர் சூழ்ந்ததுடன், ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் தி.நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பெரும்பாலன இடங்களில் நேற்று இரவே மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. 

“சென்னையில் விடிய விடிய தொடரும் கனமழையால் நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை தொடர்பாக பார்ககும் போது, அதிகபட்சமாக எண்ணுரில் 17.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக”,  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, “நுங்கம்பாக்கத்தில் 14 சென்டி மீட்டர் மழையும், எம்ஆர்சி நகரில் 13.6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகவும்” வானிலை ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும், அடுத்த 6 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது இன்னும் மழை கொட்டி தீர்க்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  

இப்பியாக, நேற்று மாலை முதல் இரவு முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள முக்கியமான 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டு உள்ளது. 

முக்கியமாக கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேஷபுரம், ராயபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், சென்னையில் சுரங்ப்பாதைகளின் வழியே செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

சென்னையில் பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது. சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை கடலூர், சேலம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னையில் மிக மோசமான வானிலை காரணமாக, சென்னையில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால், சென்னையில் பேருந்து, ரயில் போக்குவரத்தைத் தொடர்ந்து, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.