கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதுவையில் 1 முதல் 8 வரை இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை” என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரம் அடைந்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

இவற்றுடன், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்தது. 

தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது, காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. 

அத்துடன், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 

மேலும், சென்னை உள்ளிட்ட மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

அதே நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த பிறகும், இன்னும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் மழை மற்றும் பாதிப்பு காரணமாக இன்று 8 மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல், இன்னும் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி அறிவித்து உள்ளார்.

கடலூரில் தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள்  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்து உள்ளார்.

அதே போல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் நீலகிரி, சேலம் ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அத்துடன், தருமபுரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று  1 ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவித்துள்ளார். 

அதே போல், “புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 வரை இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், 9  முதல் 12 ஆம் வகுப்பு வரை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்” என்றும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்து உள்ளார்.