இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய அணி தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில், முதல் 2 போட்டிகளில் படுதோல்வி அடைந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. 

இதனால், அந்திய அணி கட்டமைப்பில் பெரும் மாற்றத்தையும் உத்வேகத்தையும் அளிக்கக்கூடிய ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முயற்சி எடுத்து வந்தது.

இந்த சூழலில் தான், ராகுல் டிராவிட் நியமனம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்து உள்ளது. 

அதன் படி, இம்மாதம் இந்தியாவில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து தொடரில் இருந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

அதாவது, ராகுல் டிராவிட் கடந்த ஜூலை மாதம் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது, இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இளம் வீரர்களை கொண்ட அந்த அணி, ஒருநாள் தொடரை வென்றாலும், டி20 தொடரை இழந்தது. 

இந்த தொடர், இந்திய இளம் வீரர்களுக்கான பரிசோதனையாக இருந்தாலும், ராகுல் டிராவிட்டுக்கும் பரிசோதனையாகவே அமைந்திருந்தது. 

அந்த சூழலில் தான், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்விக்கு நீண்ட நாளாக பதில் இல்லாமல் இருந்து வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ளே பயற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்களும் அப்போது அடிப்பட்டது. 

என்றாலும், ராகுல் டிராவிட், இளம் வீரர்களை கையாளுவதிலும், அணி கட்டமைப்பிலும் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் உள்ளவராக பார்க்கப்பட்டு வருகிறார். 

மேலும், இந்திய அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள், டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் ஒரே வீரர்கள் பங்கேற்பது தான், இந்திய அணியின் தொடர் சறுக்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்த நிலைமையை சீர்செய்ய ராகுல் டிராவிட் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கியமாக, நியூசிலாந்து அணி, இம்மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மேற்கொண்டு விளையாடுகிறது. இதன் படி, நவம்பர் 17 ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற இருக்கிறது. 

விராட் கோலி டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த தொடரில் இந்த அணியை டிராவிட்டுடன் சேர்ந்து வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மூலம் இந்திய அணி பல உயரங்களை அடையும் என நம்புவதாக” பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார்.