“காதல் ஜோடிகளின் நெருக்கமான தனிப்பட்ட காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், கட்டிப் பிடிப்பது, கள்ளக் காதல், கவர்ச்சியான ஆடைகள் அணிவது உள்ளிட்ட இன்னும் பல தவறான காட்சிகளை எதுவுமே ஒளிபரப்பக் கூடாது” என்று, அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆம், இது நம்ம நாட்டில் இல்லை. பக்கத்து நாடான பாகிஸ்தான் நாட்டில் தான், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் மட்டும் அல்ல, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒளிபரப்படும் நாடகங்கள், சீரியல்களில் தான் இப்போதெல்லாம் கிளாமர் காட்சிகள் அதிகமாக வீட்டிற்குள்ளே வந்து வெளிச்சம் போட்டு காட்டிச் செல்கிறது.

இதனால், வீட்டில் இருந்து சிறியவர்களுடன் டி.வி. பார்க்கும் பெரியவர்களும் முகம் சூளிக்கும் அளவுக்கு சில நேரங்களில் சங்கடமான சூழலும் ஏற்பட்டு விடுவதும் உண்டு. 

அந்த அளவுக்கு டிவியில் ஒளிபரப்படும் காதல் காட்சிகள், முத்தக் காட்சிகள், கிளுகிளுப்பான மற்றும் கவர்ச்சியான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து காட்டப்படும் காட்சிகள் முன்பை விட தற்போது அதிகரித்து உள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுவாக இது போன்ற காட்சிகள் வட இந்திய சீரியல்களில் தான் அதிகம் காட்டப்படுகிறது என்றாலும், அந்த கலாச்சாரம் தென்னிந்திய மொழி சீரியல்களுக்கும் பரவி வருவது பெரும் கவலை அளிக்கும் விசயமாக இருக்கிறது. 

இந்தப் பிரச்சனைகள் தான், தற்போது பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் டி.வி. சேனல்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. 

இதுபோன்ற முகம் சுளிக்கும்படியான காட்சிகள் அங்கு எல்லை மீறி போகவே, “இனி இது போன்ற கட்டிப்பிடிக்கும், காதல் ரசம் சொட்ட சொட்ட மனதை வருடும், படுக்கையறை காட்சிகளை இனி டிவி சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது” என்று, பாகிஸ்தான் மின்னணி ஊடக ஒழுங்குறை ஆணையம் தற்போது அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகரிகமற்ற ஆடைகள் அணிவது, கட்டிப்பிடிப்பது, வருடுவது, படுக்கையறை காட்சிகள் என ஏற்கத்தக்க வகையில் இல்லாதவற்றை ஒளிபரப்புவதால், பார்வையாளர்கள் மன ரீதியில் துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்றும், இவை எல்லாம் அநாகரிகமாக இருப்பதால், இனி பாகிஸ்தானில் டிவி சேனல்கள் இது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப கூடாது” என்றும், அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “இது போன்ற காட்சிகள், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும், பாகிஸ்தானின் கலாச்சாரத்திற்கும் பொருந்தாதவை” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

“கள்ளக் காதல், அறுவறுப்பான ஆடை அணிவது, படுக்கையறைக் காட்சிகள், காதல் ஜோடிகளின் தனிப்பட்ட காட்சிகள், பிற தவறான காட்சிகளை எதுவுமே நம் நாட்டின் கலாச்சாரத்துக்குப் பொருந்தாதவை என்றும், இதனால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நாடகங்களில் இது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை எடிட் செய்து நாகரிகமான காட்சிகளை ஒளிபரப்புவது அல்லது நீக்கி விடுவது போன்ற நடவடிக்கைகளைப் பார்வையாளர் நலன் கருதி எடுக்க வேண்டும்” என்றும், அந்நாட்டின் டிவி சேனல்களுக்கு அந்த ஆணையம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.