வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவச ஆலோசனையில் ஈடுபட்டார்.

“வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இ்த வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாகக் கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையைப் போல் கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னை மாநகரமே மழை நீர் சூழ்ந்து, சென்னையே குட்டி தீவு போல் காட்சி அளிக்கிறது.

இவற்றுடன், நேற்று மாலை முதல் கிட்டதட்ட 17 மணி நேரத்திற்கு விடாது மழை கொட்டி தீர்த்திருக்கிறது.

அத்துடன், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்க உள்ளதால், அப்போதும் மிக அதிக கன மழையும் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் பலமாக வீசக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும், தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து, சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி, சென்னையை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழையாலக் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 

இந்த நிலையில் தான், வட கிழக்கு பருவமழை தீவிரமைடைந்திருக்கும் இந்த சூழலில், மழையின் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் சற்று முன்பாக அவசர ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையின் போது, “சென்னையில் மிகவும் தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது, மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பது, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ள நிவாரண உதவி பற்றியும்” இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

குறிப்பாக, சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளை இன்னும் துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அதன் படி, கன மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கடலூர் செல்கிறார். அங்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, “சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தயாரிக்கப்படும் உணவு, தரமானதாகத் தயாரிக்கப்படுகிறதா?” என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த உணவையும் சாப்பிட்டுப் பார்த்தார். அதன் தொடர்ச்சியாக, சக அமைச்சர்களுடன், சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

இதனிடையே, “மழை பாதித்த இடங்களுக்குச் செல்ல மாநில மற்றும் மத்திய மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக” அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.