“அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக” வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை மிக தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை பலத்த காற்றுடன் சென்னை அருகே கரையை கடந்தது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் பரவலாகவே கன மழை கொட்டி தீர்த்தது. அதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் சாலைகளில் வெள்ளமாக ஓடியதுடன், சென்னையில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துகொண்டது. 

இதனால், சென்னையில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக “அந்தமானில் நாளை சனிக் கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக” வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

“இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும்” என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த எச்சரிக்கையின் படி, இன்றைய தினம் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், நாளைய தினம் சனிக் கிழமை அன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் சென்றும் கூறப்பட்டு உள்ளது.

மேலும், “நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும், 15 ஆம் தேதி திங்கட் கிழமை தமிழகத்தின் மற்ற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, “நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், தாம்பரம் 23 சென்டி மீட்டர் மழையம், சோழவரம் பகுதியில் 22 சென்டி மீட்டர் மழையும், எண்ணூர் பகுதியில் 21 சென்டி மீட்டர் மழையும் பதிவாக உள்ளது.

அதே போல், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் பகுதிகளில் தலா 18 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரம் 17 சென்டி மீட்டர் மழையும், சென்னை நுங்கம்பாக்கம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், பெரம்பூரில் தலா 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக” சென்னை வானிலை ஆய்வு மையும் குறிப்பிட்டு உள்ளது.