“நீட் விவகாரத்தில் தனக்கான கடமையை கூட தமிழக ஆளுநர் ரவி சரியாக செய்யாமல், அவசியமற்ற அரசியல் செய்கிறார் ஆளுநர் ரவி” என்று, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பொதுவாகவே, குடியரசுத் தலைவர் மற்றும் அளுநர்கள் அரசியல் சார்ந்து ஆதரவான ஒரு நிலைபாட்டை எடுத்து, அதன்படி வெளிப்படையாகவே பேசி செயல்படும் போது, அது பல நேரங்களில் மிக கடுமையாக விமர்சிக்கப்படுவது வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான்.

அந்த வகையில் தான், தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி, தமிழக அரசுடன் மோதல் போக்கை  கடைப்பிடித்து வருவதால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக்கூட, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல், தொடர்ந்து காலம் தாழ்த்தி, அரசியல் செய்து வருவதாக, தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இது தொடர்பாக, ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

அதன் படி, “அய்யா! தாங்கள் ஜனாதிபதி அல்ல” என்கிற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்க செய்தியில், “நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்பது மட்டும் தெரிவாக தெரிகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளது. 

“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியது தான் ஆளுநரின் வேளையே தவிர, ஊறுகாய் பானையில் ஊற வைப்பது அழகல்ல” என்றும், அந்த தலையங்கத்தில் மிக கடுமையாகவே விமர்சிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன், “தன்னை ஏதோ குடியரசுத் தலைவராக ஆளுநர் நினைத்துக் கொள்கிறார் எனவும், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவு செய்துவிட்டதாக” அதில் மிக காட்டமாகவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“ஒரு வேளை தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை தானே கவனிக்கலாம் என்று ஆளுநர் ரவி இணைத்து விட்டாரோ என தெரியவில்லை” என்றும், வசைபாடும் வகையில் நக்கலடித்து உள்ளது முரசொலி. 

“தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை 2 வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அது தொடர்பாக இரு முறை முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதாகவும்” அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், “சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தம்மிடம் சொன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கூறியும், தமிழக ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் எனவும், ஒரு காலத்தில் தமிழ்நாட்டு ஆளுநராக ரவி வருவார், அவர் இப்படி எல்லாம் நடந்துகொள்வர் என தெரிவிந்திருந்தால், அரசியல் சட்ட மேதைகள் எல்லாவற்றுக்கும் நேரம் குறித்து அரசியல் சட்டத்தையே பஞ்சாங்கமாக எழுதி வைத்திருப்பார்கள்” என்றும், முரசொலி மிக கடுமையாக விமர்சித்து உள்ளது. 

குறிப்பாக, “தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே ஆகும் என்பதே சட்டவியலின் முதல் கோட்பாடு எனவும், அதனை புரிந்தும், தெரிந்தும், தெளிந்தும் ஆளுநராக இருப்பவர் செயல்பட வேண்டும்” என்றும், முரசொலி நாளிதழ் வெளிப்படையாகவே தமிழக ஆளுநரை விமர்சனம் செய்து உள்ளது.