தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த  தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், “டீ செலவு மிச்சம்” என்று, பாஜக விமர்சித்துள்ள நிலையில், “டீசல் செலவு மிச்சம்” என்று திமுகவும் பதிலுக்கு வார்த்தை யுத்தம் நடத்தியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டு தினத்தில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு “தேநீர் விருந்துக்கு” வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதுடன், தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டு வைப்பதாகவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை கூறி வந்தது.

இந்த நிலையில் தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் சுமூகமான போக்கு இல்லாத காரணத்தால், இந்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக புறக்கணித்தார். 

இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் தேநீர் விருந்துக்கு செல்லாத நிலையில், தமிழகத்தில் உள்ள இன்னும் பல அரசியல் கட்சிகளும், ஆளுநரின் தேநீர் விருந்தை அதிரடியாகவே புறக்கணித்தது. இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாகவே வெடித்தது.

இந்த நிலையில் தான், “ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்தது குறித்து விமர்சனம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்” என்று, கிண்டலாக கூறினார். 

ஆனால், இதற்கு பதிலடி கொடுத்து உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளுநர் ஷாநவாஸ், “டீ செலவு மிச்சமா?, இல்லை டீசல் செலவு மிச்சம்” என்று, பதிலடி கொடுத்து உள்ளார். 

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இந்த தேநீர் விருந்து யார் தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா? இல்லையா? என்பதை பில் வரும் வரை காத்திருப்போம்” என்று, அவரும் தனது பங்கிற்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.

மேலும், இது தொடர்பாக திமுகவின் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா கூறியுள்ள பதிலில், “தன்னுடைய ஒரே பதிவில் ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்து உள்ளார். டீ கூட சொந்தக் காசில் இல்லையா?” என்று, அவரும் தனது பங்கிற்கு நக்கலாக பதிலடி கொடுத்து உள்ளார்.

அத்துடன், “இங்கிருந்து தமிழக மக்களின் பணத்தில் சாப்பிட்டுவிட்டு, நாங்கள் கொடுத்த ஒரே ஒரு வேலையான நீட் விலக்கு மசோதாவை டெல்லிக்கு அனுப்புவதைக் கூட செய்யவில்லை” என்றும், அவர் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் புறக்கணித்த நிலையில், இன்றைய தினம் அவர் நரிக்குறவர் இன மக்களின் வீட்டில் தேனீருடன், இட்லி, வடை சாப்பிட்டது தொடர்பான புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல், ஆளுநரின் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், “டீ செலவு மிச்சமா? -  டீசல் செலவு மிச்சமா?”  என்கிற, பாஜக - திமுக மோதல் இணையத்தில் பெரும் ட்ரெண்டாகி வருகிறது.