“அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இன்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவச் சூரியன்” என்று, குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன், சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலமாகச் சமப்படுத்தப் போராளி” என்றும், புகழாராம் சூட்டினார்.

அத்துடன், “ 'இருட்டறையில் இருக்குதடா உலகம் - சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே' என்ற, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப் போல, சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர்” என்றும், முதல்வர் புகழாராம் சூட்டினார்.

மேலும், “அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி. வேண்டியதை சேர்த்த ஓவியர்” என்றும், முதல்வர் புகழ் பாடினார்.

“அண்ணல் அம்பேத்கர், அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர் என்றும், அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை” என்றும், கூறினார்.

“எதிர்காலத்துக்கு ஒளி விளக்கு அது. நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை 'சமூகநீதி நாளாக' அறிவித்தது போல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை சமத்துவ நாள் என்று, கொண்டாட வேண்டும்” என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது” என்றும், சுட்டிக்காட்டினார்.

“அதன் படி, இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதி மொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், அறிவித்தார்.

“நேற்றைய கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழு அளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன் வைத்தார் என்றும், இந்த இந்தக் கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், கூறினார். 

“3 வது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பெரியாருடைய நூல்களை 21 மொழிகளில் மொழி பெயர்த்ததைப் பாராட்டியதோடு, அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழி பெயர்த்து புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம் பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், முதல்வர் கூறினார்.

“சமூக நீதியின் நோக்கம் சமத்துவத்தை அடைவதே என்பதையும், இவ்விரண்டும் நம் இலக்கின் 2 கண்கள் என்பதையும் இந்த மாமன்றம் மட்டுமல்ல, இந்தியாவே அறியும்” என்றும், தெரிவித்தார்.

“தமிழர்கள் அனைவரும் உயர்ந்த நிலையை அடைய எத்தகைய விண்ணப்பம் வந்தாலும், அதை உடனே பரிசீலித்து ஆவன செய்கிற ஆட்சி தான் இப்போது நடக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.