மதுரையில் இன்றைய தினம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தின் போது, எதிர்பாரத விதமாக ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சயைாக நடைபெற்று வரும் நிலையில், விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 

கொரோனா கட்டுப்பாடுகளால், கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்த வைபோகத்தை காண இந்த ஆண்டு   லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில் தான், கள்ளழகர் இன்றைய தினம் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது வைகை ஆற்றின் கரையின் அருகே திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வையில் அளவுக்கு அதிகமான பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. 

அதாவது, அழகர் ஆற்றில் இறங்கியபோது, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி முண்டியடித்து பெரும்பாலான பக்தர்கள் திடீரென்று வைகை ஆற்றில் இறங்கினர். இதனால், அந்த வைகை ஆற்றின் கரையோரம் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு, முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்த கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் எதிர்பாரத வகையிலில் மயக்கமடைந்தவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனையடுத்து, அவர்களது உடல்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் 40 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் உட்பட, 45 வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் என்றும் தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து, உயிரிழந்த இந்த இருவர் குறித்த தகவல்கள் இதுவரை கண்டுப்பிடிக்க முடியாத நிலையில், அவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரிக்கத் தொடங்கி உள்ளனர். அத்துடன், இந்த பக்தர்களுடன் வந்த மற்ற உறவினர்கள் யார் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், மயங்கமடைந்த எஞ்சியோரை மீட்ட போலீசார், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்த வைபோகத்தில் சிக்கி, 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போன உறவினர்கள் குறித்து தெரிவிக்கவும், காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை கேட்டறியவும் 94980 42434 என்ற உதவி எண்ணை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. 

அத்துடன், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா 10 லட்சம் ரூபாய் நிதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.