ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர் அதேபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது என்று கோவை துடியலூர் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது பேசியுள்ளார்.


மேலும் அவர், ‘’கொங்கு மண்டலத்தில் சிறுகுறு தொழில், நெசவுதொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலுமணி தனது சகோதரர் மூலம் கொள்ளையடித்து வருகின்றார். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை காப்பாற்றி இந்த அரசு துரோகம் செய்து வருகிறது. இவர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு பெரிய தண்டணையை மக்கள் கொடுக்க வேண்டும். 


நேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இங்கு வந்து பிரச்சாரம் செய்தார். அமைதியாக இருந்த கோவையில் ஊர்வலமாக சென்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள் அதேபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது.


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திமுக ஆட்சியில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கின்றார். இந்தியாவிலேயே அதிகமாக பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கக்பட்ட பெண்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். பாஜக ஆளும் மாநிலத்தின் நிலையை இவ்வளவு மோசமாக வைத்துக்கொண்டு திமுகவை பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?


அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்நோக்கி போய்விட்டோம். திராவிட இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், சுயமரியாதை, தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும். மதவெறியை திணிக்கவும், இந்தியை திணிக்கவும் மத்திய அரசு முயல்கின்றது. இது தந்தை பெரியார் பிறந்த மண்,அண்ணா பிறந்த மண், கலைஞர் பிறந்த மண் இங்கு மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது” என்றார் ஸ்டாலின்.