தேசிய விருது வென்ற திரைப்படத்துக்கு திரையரங்கங்கள் முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், “18 ப்ளஸ் ஆபாச காட்சிகள் தான் காரணமா?” என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தேசிய விருது வென்ற “பிரியாணி” திரைப்படத்துக்குத் தான், இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு சமீபத்தில் தேசிய விருதுகளை அறிவித்தது. இதில், தமிழைப் போலவே மலையாள திரையுலகை சேர்ந்த பல படங்களும் தேசிய விருதை அலங்கரித்தன. அதில், குறிப்பிட்டுச் சொல்லும் படியாக, “பிரியாணி” படமும் தேசிய விருது பெற்றது.

சஜின் பாபு என்பவர்  “பிரியாணி” திரைப்படத்தை இயக்கி இருந்தார். சஜின் பாபு, இதற்கு முன்னதாக இரண்டு குறிப்பிடத்தக்கப் படங்களை இயக்கி இருந்தார்.

இதில், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, சஜின் பாபு இயக்கிய “அன்டோ தி டஸ்க்” மற்றும் “அயல் சாஸி” ஆகிய 2 திரைப்படங்களும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட படங்களாகப் பார்க்கப்படுகின்றன. 

அத்துடன், சஜின் பாபு தற்போது இயக்கியிருக்கும் “பிரியாணி” படம், ரோம் நகரில் நடந்த ஆசியடிகா திரைப்பட விழாவில் நெட்பாக் சிறந்த திரைப்பட விருதும்,  பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருது உள்ளிட்ட பல விழாக்களில் பல்வேறு விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது.

மேலும், “பிரியாணி” திரைப்படம், சமீபத்தில் முடிவடைந்த கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவிலும் அதாவது IFFK யில் திரையிடப்பட்டது. 

கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண்ணின் போராட்டத்தின் கதையைப் பற்றிப் பேசுகிறது, இந்த “பிரியாணி” படம்.

தனது அபார நடிப்பால் சிறந்த பெண் நடிகருக்கான மாநில விருதை வென்ற கனி குஸ்ருதியால், மைய கதாபாத்திரமான கதீஜா என்கிற கதாபாத்திர நடித்திருக்கிறார். 

இந்த படத்தில், சிறப்பாக நடித்ததற்காக மாஸ்கோ திரைப்பட விழாவின் பிரிக்ஸ் போட்டி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதையும் கனி குஸ்ருதியால் வென்று உள்ளார்.

இதனையடுத்து, “பிரியாணி” திரைப்படம், கடந்த 26 ஆம் தேதி வெள்ளிக் கிழமை கேரளா முழுவதும் சுமார் 30 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது. எனினும், பல திரையரங்கு உரிமையாளர்களும் மேலாளர்களும் படத்தைத் திரையிட மறுத்து வருகின்றனர். 

இதற்குக் காரணம், இந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள் தான் காரணமாகப் பேசப்படுகிறது. இதனால், படத்தின் இயக்குநர் சஜின் பாபு, ஆழ்ந்த கவலையில் இருக்கிறார் என்றும், செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்துப் பேசிய தொடர்பாக பேசிய படத்தின் இயக்குநர் சஜின் பாபு, “திரைப்படத்தைப் பார்க்க போதுமான பார்வையாளர்கள் இல்லாததால் தான் திரையிடவில்லை என்று கூறுகிறார்கள். இருப்பினும் இது உண்மையான காரணம் இல்லை” என்றும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “சுமார் 30 முதல் 40 பேர் இந்த சிறிய திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்றும், குறிப்பாக இப்போது கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அப்படி இருக்கும் போது இந்த எண்ணிக்கை ஒன்றும் மோசமான எண்ணிக்கை அல்ல” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், “அரசாங்கத்தால் நடத்தப்படும் தியேட்டர்கள் திரையிடலை மறுக்கவில்லை என்றும், இது பெரும்பாலும் மலபார் பகுதியில் உள்ள ஒரு சில தனியார் திரையரங்குகள் தான் அனுமதி மறுத்துள்ளன” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

“திரைப்படத்திற்கு வரும் நபர்களிடம் தியேட்டர் மேலாளர் அல்லது உரிமையாளர்கள் படத்தில் இருக்கும் 18 ப்ளஸ் காட்சிகளைச் சொல்லி படம் பார்க்க வேண்டாம் என்று கூறி வருவதாக எனது நண்பர்கள் கூறுகிறார்கள்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார். 

குறிப்பாக, “அவர்கள் அனைவரும் முதல் காட்சியைப் பார்த்து விட்டு, படத்தைத் தீர்மானித்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மத உள்ளடக்கத்தில் பிரச்சனைகள் இல்லை என்றும், அவர்கள் படத்தைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவ்வாறு செய்ய முயற்சி எடுக்கவில்லை என்பதே உண்மை” என்றும், அவர் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, “இந்த திரைப்படத்தைத் திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அசோசியேஷனின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது என்றும், இது தொடர்பாக நான் சங்கத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அத்தகைய நடவடிக்கை எதுவும் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது” என்பதையும், அவர் குறிப்பிட்டுள்ளார். 

“ஒரு நெருங்கிய வட்டத்தினருடனான எங்கள் தொடர்புகளிலிருந்து, கேரளாவில் திரைப்படம் ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று எனக்குத் தோன்றியது என்றும், ஆனால் முற்போக்கான கருத்துகளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் இன்னும் பின் தங்கியுள்ளோம் என்பதை இது செயல்பாடுகள் காட்டுகிறது” என்றும், படத்தின் இயக்குநர் சஜின் பாபு கவலைத் தெரிவித்துள்ளார்.