இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி பாடல் யூடியூப்பில் வெளியானது. வித்தியாசமான இசையாலும், அதற்கேற்றார்போல் அமைக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெளியிடப்பட்டது முதல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, திரும்பிய பக்கமெல்லாம் இப்பாடல் ஒலிக்க துவங்கியது. பாடல் இசை, தீயின் குரல், ஒலிப்பதிவு செய்யப்பட்ட, அதில் நடித்தவர்களின் உடை என அனைத்தும் மிகுந்த பாராட்டை பெற்றது.

அதனைத்தொடர்ந்து செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த பாடல் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில், எனக்கு இந்தப்பாடல் பிடித்திருக்கிறது. காட்சிகள் அழகாக உள்ளன. பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். தெருக்குரல் அறிவிற்கு எனது பாராட்டுகள். வழக்கம்போல் தீயின் குரல் மெய்மறக்கச் செய்து விடுகிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் யூட்யூட்டில் வெளியிடப்பட்ட இந்த பாடல் இதுவரை கோடிக்கண்கான பார்வைகளையும், லைக்குகளையும் அள்ளி உள்ளது. அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் சாதனையை விரைவில் இந்த பாடல் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் தீ மற்றும் அறிவின் பங்களிப்பு இருந்தது கூடுதல் தகவல். மாறா தீம் பாடலை தெருக்குறள் அறிவு எழுதியிருந்தார். காட்டுப்பயலே பாடலை தீ பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யா தற்போது சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் நவரசா படத்தில் நடித்துள்ளார் சூர்யா.