பாலிவுட்ட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அனுபம் கேர். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர் சிறந்த உறுதுணை நடிகர் என்று பெயர் பெற்றவர். 1985ஆம் ஆண்டு நடிகை கிரோன் கேரைத் திருமணம் செய்து கொண்டார். கிரோன் கேரும் பாலிவுட்டிலும், சின்னத்திரையிலும் மிகப் பிரபலமான நடிகை. 

ரங்க் தே பசந்தி, ஃபனா, ஓம் ஷாந்தி ஓம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். சிகந்தர் என்றொரு மகன் இவருக்கு உண்டு. அனுபம் கேர், கிரோன் கேர் இருவருமே பாஜக கட்சியில் தீவிரமாக இயங்கி வருபவர்கள். சண்டிகரிலிருந்து எம்.பி.யாகத் தேர்வானவர் கிரோன் கேர். நீண்ட நாட்களாகவே கிரோன் கேர் பணியில் காணப்படவில்லை.

இதுகுறித்து சண்டிகர் நகரின் பாஜக தலைவர் அருண் சூட், கிரோன் கேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். தற்போது இதுகுறித்து அனுபம் கேர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து பதிவு செய்த அனுபம், தனது மனைவி கிரோன் கேருக்கு மையெலோமா என்கிற ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து கிரோன் விரைவில் மீண்டு வருவார் என்றும், நல்ல மருத்துவர்கள் கிரோனுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

அனுபம் கேர் ஜோதிகா நடித்த லிட்டில் ஜான் படத்தில் சுவாமிஜி பாத்திரத்தில் நடித்திருப்பார். பிரபுதேவா நடித்த விஐபி படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். உலகளவில் பிரபலமான இவர், நியூ ஆம்ஸ்டர்டம் என்ற டிவி சீரிஸில் நடித்து வந்தார்.