``பல்லி, பாம்பைவிட எனக்கு விஷம் அதிகம் என்கிறார் ஸ்டாலின். யாருக்கு விஷம் அதிகம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். தனக்கு நெருக்கடியாக அழகிரி இருப்பார் என்பதால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கே நல்லது செய்யாமல் அவரைக் கட்சியிலிருந்து விலக்கியிருக்கிறார் ஸ்டாலின். இவர் எப்படி அடுத்தவர்கள் வாழ நினைப்பார்’’ என்று தி.மு.க வினரைக் கடுமையாக விமர்சனம் செய்து தேர்தல் பிரசாரத்தின் போது பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 


திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை  ஆதரித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’ கருணாநிதி முதலமைச்சர் ஆன பின்புதான் ஊழல் என்ற சொல்லே பிறந்தது. ஸ்டாலின் எவ்வளவுதான் விளக்கினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். அம்மாவின் ஆசியோடு தமிழகத்தைச் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறேன். மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டதால் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. 


வறட்சி, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயன் பெற ரூ12,510 கோடி மதிப்பில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.9,300 கோடி மதிப்பிலான பயிர்க் காப்பீட்டு தொகையை அ.தி.மு.க அரசு பெற்றுக் கொடுத்துள்ளது.


ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் அறிக்கையை வெளியிடும் தி.மு.க அவற்றை நிறைவேற்றியிருக்கிறதா? ஆனால் அ.தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 47,152 மகளிருக்குத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் அம்மா மினி கிளினிக் 60 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு 14,000 பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

 
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவுற்றதும், திருச்சி மாவட்ட மக்களுக்குத் தண்ணீர் பிரச்னை இருக்காது. ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான்.கருணாநிதி முதலமைச்சர் ஆன பின்புதான் ஊழல் என்ற சொல்லே பிறந்தது. இயற்கையும் நமக்குச் சாதகமாக இருக்கிறது. அ.தி.மு.க ஐஎஸ்ஐ முத்திரைக் கட்சி. ஐஎஸ்ஐ முத்திரை இருந்தால் பொருள்கள் தரமாக இருக்கும். அதுபோல் அ.தி.மு.க தரமான கட்சி" என்றார்