“ராகுல்காந்தி திருமணமாகாதவர் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்” என்று, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் எம்.பி. தற்போது மன்னிப்பு கேட்டு உள்ளார்.

கேரளா மாநில சட்டமன்றத் தேர்தலானது ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறுகிறது. இதனால், கேரளாவில் அரசியல் அனல் பறந்துகொண்டு இருக்கிறது.

கேரளா மாநிலத்தைப் பொறுத்த வரையில், அங்கு தற்போது ஆளும் கட்சியாக உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதற்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான், நேரடி போட்டி நிலவுகிறது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்துள்ள நிலையில், கேரளாவில் நேரடியாக எதிர் எதிர் துருவங்களாகக் களத்தில் மோதி நிற்கின்றன. 

தமிழகத்தைப் போலவே கேரளா மாநிலத்திலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடிக்கடி கேரளா சென்று அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இப்படியாக, சமீபத்தில் கேரளா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அந்த பகுதியில் உள்ள மீனவர்களுடன் கடலுக்குச் சென்று குளித்து மகிழ்ந்தார். அத்துடன், அந்த பகுதியில் உள்ள கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்வு, கேரளாவில் பெரும் வைரலானது. அத்துடன், இது பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சுயேட்சை முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ் என்பவர், “மகளிர் கல்லூரிகளுக்கு, மட்டும் சென்று ராகுல் காந்தி பார்வையிடுகிறார். அவர் அங்கு சென்று பெண்கள் எப்படி நேராக நிற்க வேண்டும்? எப்படி குனிய வேண்டும்? என்று பாடம் எடுக்கிறார்” என்று, குறிப்பிட்டு கேள்வி எழுப்பி எழுப்பினார். 

மேலும், ராகுல் காந்தியின் செந்த செயலை குறிப்பிட்டு, “பெண்களே, ராகுல் காந்தியின் அருகில் சென்று அப்படி எதுவும் செய்யாதீர்கள். அவர் திருமணமாகாதவர்” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

குறிப்பாக, “ராகுல் காந்தி முன்பு பெண்களே குனிந்து நிற்காதீர்கள். அவரிடம், பெண்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்” என்றும், அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த பேச்சு மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இதனால், கேரளாவில் பல்வேறு தரப்பினரும் முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அவர் எதிர்பார்க்காத வகையில் மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தான், முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ் தற்போது வருத்தம் தெரிவித்து இருக்கிறார். 

இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ், “எரட்டயார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு அவதூறாகப் பேசி விட்டேன். நான் பேசிய கருத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெறுகிறேன். இது குறித்து, பொதுத் தளத்தில் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார். இதுவும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.