மக்களைக் குழப்பி, அனுதாபத்தைத் தேடி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார் ஸ்டாலின். நீட் தேர்வைக் கொண்டு வந்ததே தி.மு.க.வும், காங்கிரஸும் தான், அ.தி.மு.க. அல்ல. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக உள்ளது.” என்று திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், " திருச்சி மாவட்டத்தில் 60 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்த பிரதமரிடம் இன்று நேரில் வலியுறுத்தினேன். காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவுற்றதும் திருச்சி மாவட்ட மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்சனையே இருக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியுள்ளோம். 

தேர்தல் அறிக்கையில் அறிவித்த எதையாவது தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது நிறைவேற்றியுள்ளதா? விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துகிறேன். 

திருச்சியில் மட்டும் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ளது. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், நீர் நிலைகள், தூர்வாரப்பட்டுள்ளதால், ஏரி, அணைகள் நிரம்பியுள்ளன

காவிரியைச் சுத்தப்படுத்த 'நடந்தாய் வாழி காவிரி திட்டம், கல்லணை கால்வாய் திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்" எனத் தெரிவித்தார்.