உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு 1.54 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரிம் இரண்டு விலை உயர்ந்த துப்பாக்கிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் மிக விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதனால், இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இந்த 5 மாநிலங்களிலும், 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், இந்தியாவிலேயே மிக அதிகமான தொகுதிகளை கொண்ட மாநிலமாக திகழும் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் கிட்டதட்ட 403 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.

அதன் படி,  உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடக்கிறது. அதாவது, உத்தரப் பிரதேசத்தில் வரும் 10 ஆம் தேதி 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 58 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக, வரிந்துக்கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளில் முழு முதல் தீவிரமாக இறங்கி ஈடுபட்டு வருகிறது.

அத்துடன், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், அனைத்து கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் மிகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் படி, அந்த மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், அங்குள்ள கோரக்பூர் நகர்ப் புறம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

இந்த நிலையில் தான், உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

யோகி ஆதித்யநாத் தாக்கல் செய்த அவரது வேட்பு மனுவில் சில தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

அதன்படி, 

- 1,54,94,054 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- 6 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

- 12,000 ரூபாய் மதிப்பிலான சாம்சங் செல்போன் உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. 

- 1,00,000 ரூபாய் மதிப்பிலான கைத் துப்பாக்கி, மற்றும் 80,000 ரூபாய் மதிப்பிலான ரிவால்வர் ஆகியவையும் உள்ளன.

- 49,000 ரூபாய் மதிப்பிலான 20 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- தங்க செயின் ஒன்றும் உள்ளது. 

- ஆபரணங்களைக் கொண்ட ருத்திராட்ச மாலை உள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது. 

- கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் 13,20,653 ரூபாய் என்று இருந்து உள்ளது.

- கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 15,68,799 ரூபாய் ஆண்டு வருமானம். 

- 2018-19 ஆம் ஆண்டில் 18,27,639 ரூபாயும், கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 14,38,670 ரூபாய் ஆண்டு வருமானம் எனவும், தனது வேட்பு மனுவில் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

- மிக முக்கியமாக, யோகி ஆதித்யநாத் பெயரில் எந்த விளை நிலமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

- அதே போல், யோகி ஆதித்யநாத்துக்கு சொந்த வாகனமும் இல்லை எனவும், தனது வேட்பு மனுவில் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.