நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முடிவு செய்ய “சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த” அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரம், பெரும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார். இதனால், தமிழக அரசியல் கட்சிகள் யாவும் நேற்றைய தினம் ஒன்றன் பின் ஒன்றாக ஆளுருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

அதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, “அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் கூடி முடிவு செய்தது.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டமானது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. 

காலை 11 மணி அளவில் தமிழக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கிய நிலையில், இதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை தமிழக ஆளுநர் சரியாக செய்யவில்லை” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

முக்கியமாக இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

அதன் படி,

- நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

- நீட் விலக்கு தொடர்பாக, “அடுத்து என்னமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது குறித்து முடிவு செய்ய, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தற்போது முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

- அதன் படி, வரும் 8 ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட, வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்த்தப்பட்டு உள்ளது.

- நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் இன்றைய தினம் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

- இப்படியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்ட மன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், இந்த தீர்மானம் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டது.

- மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் படி நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், “சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடருக்கான தேதியை கூடிய விரைவில் சபாநாயகர் அறிவிப்பார்” என்றும், தற்போது தகவல் வெளியாகி உள்ளன.