19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்றைய தினம் மோதுகின்றன. இதில், 5 வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

19 வயதுக்குட்பட்டோருக்கான 14 வது ஜூனியர் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 

இந்தத் தொடரில், யஷ் துல் தலைமையிலான இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே மிக அற்புதமாக ஆடி வருகிறது. இதனால், இந்திய இளம் அணியானது வெற்றிகளை தொடர்ச்சியாக குவித்து வருகிறது.

இந்த நிலையில், இப்போட்டியின் லீக் சுற்றின் பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் நாக்ட் அவுட் சுற்றுக்கு இந்திய அணி, முன்னேறிய நிலையில், காலிறுதியில் வங்கதேச அணியையும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. 

இதன் மூலமாக, இந்திய இளம் அணியானது 8 வது முறையாக, உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தற்போது தகுதி பெற்று உள்ளது.

இதில், ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, காலிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவையும், அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இந்த நிலையில் தான், “14 வது ஜூனியர் உலகக் கோப்பையில் யார் சாம்பியன்?” என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்றைய தினம் மோதி விளையாடுகின்றன.

இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 க்கு நடைபெறுகிறது. 

குறிப்பாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது. 

அதே போல், கடந்த 1998 ஆம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

இதனால், இங்கிலாந்து அணியும் 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மிக கடுமையாக போராடும் என்றே கூறப்படுகிறது. இதனால், இரண்டு அணிகளும் சாம்பியன் கோப்பைக்காக மல்லுக்கட்டி நிற்பதால், இன்றைய போட்டி இரு நாட்டு ரசிகர்களுக்கும் மிகப் பெரிய விருந்தாக அமைவதுடன், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.