“அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது ஏன்? என்பதற்கு குறித்தும், நீட் தேர்வுக்கு ஆதரவா? எதிர்ப்பா?” என்பது குறித்தும் அக்கட்சியின் ஒருகிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன் வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியது, பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, “அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் சற்று முன்னதாக கூடி முடிவு செய்தது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை தமிழக ஆளுநர் சரியாக செய்யவில்லை” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்றைய தினம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

ஆனால், தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று, ஏற்கனவே பாஜக அறிவித்திருந்த நிலையில், இன்றைய தின கூட்டத்திற்கு அதிமுகவும் கலந்துகொள்ளவில்லை. இதனால், “தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த அதிமுக ஆதரவாக துணை நிற்கிறதா?” என்கிற விமர்சனமும் எழுந்தது. இதனால், அதிமுக கடும் அதிர்ச்சி அடைந்தது.

இந்த சூழலில் தான், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவைப் பொறுத்த வரையில், நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம், நாளையும் எதிர்ப்போம்” என்று, குறிப்பிட்டார். 

“நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை, அதிமுக உறுதியாக எதிர்க்கும்” என்றும், அவர் திட்டவட்டமாக கூறினார். 

“தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “இந்த நீட் தேர்வை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டுவரப்பட்டது என்றும், அதனால் தான் தற்போது இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டு உள்ளது” என்றும், குற்றம்சாட்டினார். 

இதனால், “இதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், “இந்திய அரசியலமைப்பின் படி, ஓர் ஆளுநராக ஆற்ற வேண்டிய பணியை தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்” என்றும், ஆளுநர் ரவிக்கு ஓ.பன்னீர்செல்வம், புகழாராம் சூட்டினார்.

ஆனால், அதே நேரத்தில், “நீட் விவகாரத்தில் அதிமுக - பாஜகவின் நாடகத்திற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக கூறி உள்ளார்.

அத்துடன், “மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கும் ஓபிஎஸ் ன் இந்த செயல், கண்டனத்திற்குரியது” என்றும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

மேலும், “தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு நுழையவில்லை என்றும், மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும்” என்றும், துரைமுருகன் பதில் அளித்து உள்ளார்.

குறிப்பாக, “நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டு அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகின்றன” என்றும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.