தமிழக ஆளுநரின் செயல்கள் குறித்து, “நாடி நரம்பு தெறிக்கத் தெறிக்க, ரத்தம் கொதிக்கக் கொதிக்க” நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசியது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“தமிழகம் 3000 ஆண்டு முற்போக்கு பாரம்பரியமும், சமத்துவ சிந்தனையும், சமூக நீதியும் விளைந்த நிலம். அதன் குரலை நீங்கள் நசுக்கி இன்பம் காண்கிறீர்கள்” என்று, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் முழங்கி இருக்கிறார்.

தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில், “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? என்று, அறிஞர் அண்ணா அன்றே கேட்டார்” என்று, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடுமையாக முழங்கிய நிலையில், ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரி தமிழக எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டும், வெளிநடப்பு செய்தும் வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அப்போது பேசிய எம்.பி. சு.வெங்கடேசன், குடியரசுத் தலைவர் உரிமைகளையும் கடமைகளையும் பற்றி பேசிவிட்டு, “அதைச் சார்ந்து பேச இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுப் பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், “நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வாடகை வீட்டிலிருக்கும் எனக்கு அந்த வீடோ, நிலமோ சொந்தமில்லை. வீட்டின் உரிமையாளரிடம் உரிமையும் கடமையும் உண்டு. அவரது உரிமையில் நான் தலையிடுவது இல்லை. மதிக்கிறேன். என்னைப் போல தமிழகத்தில் ஒருவர் வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் வாடகை செலுத்துவதில்லை. 

சட்டம் அவருக்கு அந்த சலுகையை வழங்கியுள்ளது. ஆனால், வாடகைக்கு இருக்கும் அவர் உரிமையாளரின் உத்தரவுகளை அறவே மறுக்கிறார். 

உரிமையாளரின் தீர்மானத்தைத் திருப்பி அனுப்புகிறார். யார் என உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கவும் ரத்து செய்யவும் அதிகாரம் படைத்த ஒருவர், மக்களாட்சியின் தத்துவத்தை அதிகாரத்தையும் ரத்து செய்யத் துணிவது ஜனநாயகத்தின் அவமானம். 

ஆறரை கோடி தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட அவையால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம் என்று கூறுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து” என்று, மிக கடுமையாகவே எம்.பி. சு.வெங்கடேசன் நாடாளுமன்ற அவையில் முழங்கினார்.

நாடாளுமன்றத்தில் இடியென வீர முழக்கமிட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இந்த எழுச்சியுரையானது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இதனை, பலரும் தங்களது இணையதள பக்கங்களில் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.