பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் ஆடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாட்டை கர்நாடக அரசு விதித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

hijab, rss

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த மாதம்  ஹிஜாப் அணிந்ததற்காக 6 மாணவிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இன்று உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள பண்டார்கர் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவி சால்வை அணிந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கத்தை எழுப்பி கல்லூரிக்கு வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பை பதிவு செய்ய மாணவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் சென்றனர். 
மறுபுறம் இஸ்லாமிய மாணவிகள் சீருடையின் மேலே ஹிஜாப் அணிந்து கொண்டு தனியாக ஊர்வலம் கூடினர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, மோதல் ஏற்படாமல் இருக்க கூட்டத்தை கலைத்தனர். மேலும் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குழந்தைகள் பள்ளியில் ஹிஜாப் அல்லது காவி தாவணி ஆகிய இரண்டையுமே அணியக்கூடாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார். மேலும், அவர் கூறியதாவது, “அனைத்து மதத்தினரும் சேர்ந்து படிக்க வேண்டிய இடமே பள்ளிக்கூடம் ஆகும். அனைவருமே பாரத மாதாவின் குழந்தைகள் ஆவர்.  சில மதவாத அமைப்புகள்  நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு இழைக்க முயற்சித்து வருகின்றனர். அவர்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக ஆளும் கர்நாடகாவில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். உடுப்பியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த போராட்டம் தொடங்கியது. அங்குள்ள மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் உட்கார அனுமதிக்கக் கோரி இன்னும் போராடி வருகின்றனர். மேலும், இந்த சர்ச்சை சம்பவம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் எரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள் பலரும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களின் இத்தகைய போராட்டங்கள் ஹிஜாப் சர்ச்சையை மேலும் தீவிரமாக்கி உள்ளது.