ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா, போலீசாரால் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து கிளம்பியது. இது, இஸ்லாமிய மக்கள் முன்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள மெக்கா மசூதியில் காவிக்கொடி பறக்கும் சர்ச்சைக்குரிய வீடியோவை, கிராபிக்ஸ் செய்து வெளியிட்டதால் அங்கு பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

அதன் தொடர்ச்சியாக, சமீபகத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலின் போது, இஸ்லாமிய மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தும் விதமாக, “இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம்” என்று, உத்தரப் பிரதேச மாநிலம் சாமியார் ஒருவர் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பகிரங்கமாகவே மிரட்டில் விடுத்தார்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற ஒரு பிம்பத்தை, வட மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஏற்படுத்தி வருவததுடன், இதனால் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், இந்த சர்ச்சைகளையும் மிஞ்சும் வகையில், ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தாவால், தற்போது புதிய சர்ச்சையும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.

அதன்படி, “உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் பூஜை நடத்தப்போவதாக” பகிரங்கமாக அறிவித்த ஸ்ரீ வித்யா மடத்தின் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா, அங்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது, அந்த சாமியாரை போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

அப்போது, அங்கிருந்து கொண்டு சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசும் போது. “ஞானவாபி மசூதி வழக்கில் நீதிபதியின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று, குறிப்பிட்டார். 

ஆனால், “நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை, கடவுள் பசியோடும் தாகத்துடனும் இருப்பாரா?” என்றும், அந்த சாமியார் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “இந்த விவகாரத்தில், மசூதிக்குள் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரி, போலீசிடம் நாங்கள் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தோம் என்றும், ஆனால் போலீசாரிடம் இருந்து பதில் வரவில்லை” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “நான் இங்கேயே உட்கார்ந்து கொள்ளப்போகிறேன், அங்கு பூஜை செய்யப்பட்ட பிறகுதான் நான் உணவு சாப்பிடுவேன்” என்றும், அவர் பகிரங்கமாகவே கூறினார்.

ஆனால், வாரணாசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஞானவாபி மசூதி வழக்கு, வரும் ஜூலை 4 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா, போலீசாரால் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கு எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்கிற செய்தியும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.