“அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், நாங்கள் தூண் அளவுக்கு பதிலடி தருவோம்” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மிக காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இது போதாத காலம் போல?!” காரணம், பாஜக கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் தொடங்கி, தமிழக பத்திரிகையாளர்கள் வரை பலரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கொடிப் பிடிக்கத் தொடங்கி உள்ளனர்.

பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்தும், அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, சென்னையில் உள்ள ஊடகத்தினரை மிக மோசமான அளவுக்கு கடுமையாக விமர்சனம் செய்து, மிரட்டல் வகையிலும் பேசினார்.

இதன் காரணமாக, பத்திரிகையாளர்களை கண்ணியக் குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து, சென்னையில் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில், “கருத்துரிமையை,. கேள்வி கேட்கும் உரிமையை நசுக்க கூடாது, செய்தியாளர்களை அவமதிக்க கூடாது, அரசியல் அழுத்தங்களை தர கூடாது, நாவடக்கம் வேண்டும்” உள்ளிட்ட பல முழக்கங்கள் அண்ணாமலைக்கு எதிராக எழுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தற்போதைய அமைப்பு செயலாளருமான பொன்னையன் பாஜகவுக்கு எதிராக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, “அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரப் பார்க்கிறது” என்ற ஒரு குண்டை பெண்ணையன் தூக்கிப் போட்டார்.

அத்துடன், “பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும், தமிழக நலனுக்கும் நல்லதல்ல” என்றும், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவை மிக கடுமையாகவே பொன்னையன் விமர்சித்தார்.

இந்த கருத்திற்கு, அதிமுக தலைமை மௌனம் காத்து வந்த நிலையில், இன்றைய தினம் பேசிய ஓபிஎஸ், “அது, அதிமுகவின் கருத்து அல்ல என்றும், பொன்னையனின் தனிப்பட்ட கருத்தும்” என்றும், விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தான், மதுரையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுகவை பாஜக விமர்சித்தால், நிச்சயம் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று, குறிப்பிட்டார்.

“மத்திய அரசிடம் பதவி பெற அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றும், ஏற்கனவே பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் பதவி பெற்றத்தை போல், அண்ணாமலையும் தற்போது பதவி பெற நினைக்கிறார்” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், “அண்ணாமலையின் செயல்பாடுகள், மத்திய அரசு பதவியை குறி வைத்ததைப் போல் இருக்கிறது என்றும், அதிமுக தான் தற்போது எதிர்க்கட்சி” என்றும், சூடு பறக்க பேசினார். 

“ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக என்றும், 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது” என்றும், பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுத்தார். 

குறிப்பாக, “பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம் என்றும், அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம்” என்றும், பாஜகவை மிக கடுமையாகவே அவர் விமர்சனம் செய்தார்.

“கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தயார் என்றால், அதிமுகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாகவும்” பாஜகவிற்கு அவர் சவால் விடும் வகையில் உறக்க பேசினார். 

“யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓ.பி.எஸ், - இ.பி.எஸ் தயார்” என்றும், அவர் தெரிவித்தார்.

முக்கியமாக, “வி.பி.துரைசாமி எல்லாம் அதிமுகவை பற்றி பேசலாமா?” என்று, விமர்சித்த செல்லூர் ராஜு, “இதைவிட ஒரு கொடுமை நாட்டில் வேறு எதுவுமே இல்லை” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மிகவும் நொந்துகொண்டார்.

இதனிடையே, அதிமுக - பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் உரசல் அதிகமாகிக் கொண்டே வருவதால், விரிசலும் அதிகரிக்கும் என்றே பேசப்படுகிறது. 

தற்போதைய தமிழக அரசியல் சூழலில், அதிமுகவில் பொன்னையனுக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து உள்ளதால், பாஜகவை விமர்சிக்க அதிமுகவில் அடுத்தடுத்து தலைவர்கள் இனி வரிசைக்கட்டி நிற்பார்கள் என்றே கூறப்படுகிறது.