கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியிருந்தது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் கணிசமாக குறைந்ததையடுத்து தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விளக்கிக்கொண்டது. இருப்பினும் முககவசம் அணிவதும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை மட்டும் செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா 3 அலை  குறைந்து வந்ததையடுத்து, பல்வேறு மாநிலங்களில்  விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.  இந்நிலையில் அண்மைக்காலமாக  மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், கொரோனா 4-வது அலை உருவாகக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றன. அதனை உறதிப்படுத்தும் விதமாகவே இந்தியாவில்  டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு கனிசமாக அதிகரித்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்று முன்தினம் 55 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை  72-ஆக உயர்ந்தது. இதையடுத்து, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும்  404-ஆக அதிகரித்திருக்கிறது. இதனால்  கொரோனா நான்காம் அலை ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. ஆகையால் தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது  கட்டாடமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் டெல்லியில் 500 ரூபாயும், தெலங்கானாவில் 1000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

அத்தோடு மேலும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வரும் நிலையில்,  இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்தும், அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும்  ராஜேஷ் பூஷன் விளக்கம் அளிக்க உள்ளார்.  இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொற்று  பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக பிரதமர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக அதன் எண்ணிக்கையானது ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்ததமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா 4-ம் அலை ஜூன் மாதம் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் மக்கள், அலட்சியம் காட்டாமல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்  2,541  பேருக்கும், நேற்று 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 65ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 16,279 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 188.19 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.