பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கூட்டாக சேர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார்.

இந்தியாவில், அவர் நேற்று முதல் சுற்றப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று முதல் நாள் அன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தடைந்தார்.

அப்போது, குஜராத் விமான நிலையத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், அம்மாநில ஆளுநர்  ஆச்சார்யா தேவ்ராத் மற்றும் அம்மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 2 ஆம் நாளான இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டெல்லியில் போரீஸ் ஜான்சனுக்கு அணிவகுப்பு மரியாதையுடன், சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான், பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரும் சற்று முன்னதாக கூட்டாக சேர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

பிரதமர் மோடி

அப்போது, செய்தியாளர்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி, “இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது” என்று குறிப்பிட்டார். 

அத்துடன், “இங்கிலாந்து - இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த போரீஸ் ஜான்சன் பல நடவடிக்கை எடுத்து உள்ளார்” என்றும், கூறினார்.

மேலும், “ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது” என்றும், பிரதமர் மோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், “என் கையில் இந்தியன் ஜப்  என்னும் COVID 19 தடுப்பூசி உள்ளது என்றும், அது எனக்கு நன்றாக உதவி செய்தது” என்றும், குறிப்பிட்டார். 

“இந்தியாவுக்கு மிக்க நன்றி என்றும், இன்று நாங்கள் அற்புதமான விவாதங்களை நடத்தியுள்ளோம்” என்றும், அவர் கூறினார். 

“எல்லா வகையிலும் எங்கள் உறவை பலப்படுத்தி உள்ளோம் என்றும், இந்தியாவுக்கும் - இங்கிலாந்துக்கும் இடையிலான கூட்டாண்மை நமது காலத்தின் வரையறுக்கும் நட்புகளில் ஒன்றாகும் என்றும், உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்” என்றும், அவர் பேசினார்.

“உக்ரைனில் உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் போர் பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தினோம்” என்றும், அவர் வெளிப்படையாகவே பேசினார்.

குறிப்பாக, “சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகன நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயார் என்றும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்க விரைந்து ஒப்புதல் வழங்கப்படும்” என்றும், அவர் தெரிவித்தார்.

மிக முக்கியமாக, “இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தேவை” என்றும், இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் பேசினார். இரு நாட்டு தலைவர்கள் பேசியது, உலக அளவில் பெரும் வைரலாகி வருகிறது.