சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கம் டைமண்ட் ஹார்பர் பகுதியை சேர்ந்த 30 வயதான மாணவி ஒருவர் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை கடந்த 2018-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  அப்போது அவரை உடன் படித்துவந்த கிங்ஷீக்தேவ் சர்மா என்பவர் காதலிப்பதாக கூறி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சவுர்வ தத்தா, அய்யன் பட்டாச்சார்யா உள்ளிட்டவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் இதனை குறித்து மாணவி ஐஐடி பேராசிரியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏற்படாத நிலையில்,  தேசிய மகளிர் ஆணையத்திலும் , கோட்டுர்புரம்  காவல்நிலையத்திலும் மாணவி கடந்த மார்ச் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் அளித்தார்.  மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில், சர்மா உள்ளிட்ட 8 பேர் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஆனால் இதுதொடர்பாக  யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் அதனைத்தொடர்ந்து மாதர் சங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது . சென்னை மயிலாப்பூர் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான சர்மாவை பிடிக்க, மேற்கு வங்கம் விரைந்த நிலையில் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சர்மா கைது செய்யப்பட்டார்.  இதை தொடர்ந்து கிங்ஷீக்தேவ் சர்மா  ஏற்கனவே ஜாமீன்  பெற்றதால் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். 

ஆனால் அதனையடுத்து  சர்மாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இதுதொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க தினமும் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டி.எஸ்.பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்த நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.