ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம்,  கன்னவரம் அடுத்த எனிகேபாடு பகுதியில் கடை உரிமையாளர் அலட்சியத்தால் குடிநீருக்கு பதில் கல்லூரி மாணவர் ஆசிட் குடித்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஏவியேஷன் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் சைதன்யா.  இவர் கடந்த 12-ம் தேதி மாலை நண்பர்களுடன் வாலிபால் விளையாட சென்றார். விளையாடி முடித்த பின்னர் எனிகேபாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் தாகத்துடன் இருந்ததால் கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டிலை கேட்டார். கடை உரிமையாளர் தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக ஏற்கனவே பிரிட்ஜில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அதனை கவனிக்காத  சைத்தன்யா தாகத்துடன் இருந்ததால் பாட்டிலை வாங்கியவுடன் அதனை அப்படியே திறந்து வாயில் ஊற்றி கொண்டார். ஆசிட் உள்ளே சென்றதும் அவருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆசிட் உடலில் சென்றதால் துடிதுடித்து போனார் சைதன்யா.

இந்நிலையில் இச்சூழ்நிலை கவனித்த சக மாணவர்கள் சைதன்யாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைதன்யா தனது குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளதால், லயோலா கல்லூரி மாணவர்கள் நன்கொடை வசூலித்து மருத்துவ உதவிகளை வழங்க நிதி சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் படமடா  போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். சைதன்யா உடல் உறுப்புகள் ஆசிட் குடித்ததில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து சைதன்யா போலீசில் புகார் தெரிவித்தார். மேலும் இதன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூல்ட்ரிங்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் தண்ணீர் பாட்டில் அருகில் ஆசிட் ஊற்றி வைத்திருந்தது தெரியாமல் சைதன்யா குடித்து விட்டதாக கடை உரிமையாளர்  தெரிவித்துள்ளார்.