இந்தியில் பேச முடியாவிட்டால் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியிருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் இந்தி சர்ச்சை தலையெடுத்த நிலையில் தற்போது பா.ஜ.க அமைச்சர் இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களை வெளிநாட்டவர்களாகவே கருத முடியும். உங்களுக்கு இந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு விட்டு வேறு நாட்டுக்கு செல்லலாம் என உத்திர பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் குலைக்கும் வகையில் இந்தியாவில் இந்தி மொழி குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியை தேசிய மொழி போல கட்டமைக்க முயல்வதாக பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், மக்களும் போராடி வருகின்றனர். இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை கிளப்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளானது. மேலும் இவரின் கருத்திற்கு எதிர் கருத்தாக ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்ட ழகரம் தாங்கிய தமிழ் அன்னையின் புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டானது. 

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் பதிவும் வைரலாகி வருகிறது. ஆனாலும் தற்போது வரை இந்தியை மாநிலங்களுக்குள் திணிக்க மத்திய அரசு முயல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. மத்திய அமைச்சர்களும் தங்கள் பேச்சினூடே இந்தி மொழியை தேசிய மொழி கட்டமைத்து பேசுவதையும் கண்டுளோம்.

மேலும் இந்த இந்தி திணிப்பினை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய அவர், இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் சிறிது காலம் இந்த ஹிந்தி திணிப்பு விவகாரம் ஒய்ந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கான் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிச்சா சுதீபா, இந்தி இனி தேசிய மொழி அல்ல என்று கூறியதைத் தொடர்ந்து இந்தி மொழியைச் சுற்றியுள்ள புதிய சர்ச்சை வெடித்தது. அவரது கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடுமையான பதிலை அளித்தார். அவர் தனது படங்களை ஏன் இந்தி மொழியில் டப்பிங் செய்யப்படுகின்றன என்று கேட்டார். அதற்கு கிச்ச பதிலளிக்க மீண்டும் அஜய் தேவ் கான் பதிலளிக்க என விவாதம் நீண்டது.

அதனைத்தொடர்ந்து  இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் ஹிந்தியை நேசிக்க வேண்டும் என்றும் உத்திர பிரதேச பா.ஜ.க அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்த இந்தி மொழி குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் ஹிந்தியை நேசிக்க வேண்டும். இந்திக்கு எதிரானவர்கள் அல்லது இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் உறவு வைத்திருப்பவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறியதாவது பிராந்திய மொழியும் மதிக்கப்படுகிறது ஆனால் முதலில் இந்தி பிறகு பிராந்திய மொழி ஹிந்தி பேச முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும் என அவர் பேசியது மீண்டும் பரபரப்பை கூட்டியுள்ளது. அவரது பேச்சுக்கு சமூக வலைதளமான ட்விட்டரில் பலத்த எதிர்ப்பினை பலரும் பதிவு செய்து வரும் நிலையில் #stopHindiImposition என்ற ஹேச்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மக்களிடையே  பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியது அனைவரது எதிர்ப்பிற்கும்  பா.ஜ.க உள்ளாகியுள்ளது.