“அடுத்த 5 நாட்களுக்கு அலறவிடப்போகும் அனல் காற்று!” ஆரஞ்சு எச்சரிக்கை..!
“இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு மிக கடுமையான அனல் காற்று வீசும் என்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து” இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது, இந்தியாவின் கோடை காலம் எனறு கூறலாம். இன்னும், மே மாதம் தொடங்கவில்லை தான். என்றாலும், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் கடுமையாக வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துக்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, பொது மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
காலை முதலே வெயில் மற்றும் அதனால் ஏற்படும் அனல் காற்றின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் இயல்பு நிலையை தாண்டிய வெப்பம் சூழ்ந்த கால சூழல் நிலவி வருகிறது. இதனால், அதிகமான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
அத்துடன், “மே மாதம் 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால், அந்த தருணத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்” என்றும் ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், “தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த வரும் 5 நாள்களுக்கு மிக கடுமையான அனல் காற்று வீசும்” என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து புதிய எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய விடுத்துள்ள புதிய எச்சரிக்கையின் படி, “தமிழகத்தில் நேற்று 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக” குறிப்பிட்டு உள்ளது.
இதில், “அதிக பட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரியும், கரூரில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தி எடுத்து வருவதாக” அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும், “இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும்” என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
“இதன் காரணமாக, வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும்” கணிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை” விடுக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “இந்த ஆரஞ்சு எச்சரிக்கையானது, வெயிலின் தாக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது என்றும், மத்திய பிரதேசத்தின் ராஜ்கர்க் பகுதியில் 45.6 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவான நிலையில், வட மேற்கு இந்தியாவில் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகும்” என்றும், கணிக்கப்பட்டு புதிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், “பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் சூழலுக்கு தகுந்தார்போல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.