இந்தியாவில் தற்போது OTT தளங்களின் மீது ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் முன்னணி OTT தளமான அமேசான் பிரைம் வீடியோ இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் வகையில் நேற்று (ஏப்ரல் 28) நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில்  ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அட்டகாசமான வெப்சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களின் அறிவிப்பை வெளியிட்டது.  இவற்றில் குறிப்பாக தமிழ் ரசிகர்களை கவரும் வகையில்  வெளிவரவுள்ள வெப் சீரிஸ்கள் பின்வருமாறு:

FARZI (ஹிந்தி)

ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபர்ஸி வெப் சீரிஸில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராசி கண்ணா, கேகே மேனன், ரெஜினா கெஸன்ட்ரா, ஜாகீர் உசேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சுழல் - The Vortex

முன்னணி இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி, வால் வாச்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து எழுதி இருக்கும் சுழல் - The Vortex வெப் சீரிஸை மகளிர் மட்டும் & குற்றம் கடிதல் படங்களின் இயக்குனர் பிரம்மா மற்றும் கிருமி பட இயக்குனர் அனுச்சரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸாக தயாராகியிருக்கும் சுழல் வெப் சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ்-கதிர் உடன் இணைந்து இயக்குனர் பார்த்திபன் மற்றும் ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வதந்தி

தொடர்ந்து வால் வாச்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள வதந்தி வெப் சீரிஸில் S.J.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க, சஞ்சனா & நாசர் ஆகியோருடன் இணைந்து வதந்தி வெப்சீரிஸில் பிரபல தமிழ் நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸான வதந்தி வெப் சீரிஸை இயக்குனர் ஆண்ட்ரூ லுயிஸ் எழுதி இயக்கியுள்ளார். 

THE VILLAGE

ஸ்டூடியோ சக்தி தயாரிப்பில் தி வில்லேஜ் வெப் சீரிஸில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸில் திவ்யா பிள்ளை கதாநாயகியாக நடிக்க, ஆலியா, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துக்குமார், கலை ராணி, ஜார்ஜ் M, ஜான் கொக்கின், அர்ஜுன் சிதம்பரம், பூஜா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

MODERN LOVE CHENNAI

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பில் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி சீரிஸ் வெளிவர உள்ளது. இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராம குமார், அக்ஷய் சுந்தர் ஆகியோர் இயக்கத்தில் வெளி வரும் எபிசோடுகளில் கிஷோர், ரம்யா நம்பீசன், அசோக் செல்வன், ரிது வர்மா, விஜயலட்சுமி, டிஜே பானு, கௌரி ரெடி, சம்யுக்தா விஸ்வநாதன், வாசுதேவன் முரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

SWEET KAARAM COFFEE

இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளி வரும் வெப் சீரிஸ் ஸ்வீட் காரம் காபி. இதில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி உடன் இணைந்து நடிகை மதுபாலா மற்றும் பிரபல மலையாள நடிகை சாந்தி பாலச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தூதா (DHOODHA-தெலுங்கு)

தமிழில் யாவரும் நலம் மற்றும் 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம்.K.குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் வெப் சீரிஸாக உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தூதா. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தூதா வெப் சீரிஸில் வெப்சீரிஸில் பிரியா பவானி ஷங்கர், பார்வதி, பிராச்சி தேசாய், தருண் பாஸ்கர் தாஸ்யம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இவை உட்பட கிட்டத்தட்ட 40 புதிய வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களின் அறிவிப்பை அமேசான் நிறுவனம் இந்திய சினிமா ரசிகர்களுக்காக வரிசையாக வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவற்றை அறிவிக்கும் வகையில் அமேசான் வெளியிட்ட டீசர் வீடியோ இதோ…