அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டில் ஒமிக்ரானால் முதல் பலி நிகழ்ந்துள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய  ஒமிக்ரான் வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமிக்ரான் பாதிப்புகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.  போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது 89 நாடுகளுக்கும் கூடுதலாக பரவி உள்ளது.  

omicron deathஇந்த வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என்றும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து ஒமிக்ரான் தாக்குவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ், தடுப்பூசியின் செயல்பாட்டினை அழித்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
ஒமிக்ரானால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படாது எனக் கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இங்கிலாந்தில் முதல் முதலாக ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒமிக்ரானால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.  50 வயது மதிக்கத்தக்க நபர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

உடல்நலம் பாதித்த நிலையில் காணப்பட்ட அந்த நபர், கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. 

இதுபற்றி டெக்சாஸ் மாகாண சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், “50 வயது கொண்ட முன்பே கொரோனா பாதித்த நபர் ஒருவர் ஒமிக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.  

அவர் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளவில்லை.  உடல்நல பாதித்த நிலையிலும் காணப்பட்டார்” என தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும்  ஒமிக்ரான் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர் ஆன்டனி ஃபெளசி தெரிவித்துள்ளார். 

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார். 

இதற்கிடையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரஸ் அதானம் கூறியதாவது:  “ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை விட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. 

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களும் ஒமிக்ரானால் மீண்டும் பாதிக்கப்படலாம். இந்த பெருந்தொற்றினால் அனைவரும் சோர்வடைந்துள்ளோம். 

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் வழக்கமான வாழ்க்கையை வாழவும் அனைவரும் விரும்புகிறோம். எனவே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். 

texas omicron death

வாழ்க்கையை இழப்பதை விட நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதே சிறந்தது. தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை விட, தற்போது ஒத்திவைத்துவிட்டு பிறகு கொண்டாடலாம். கடினமான முடிவுகள் அவசியம்.

2022 இறுதிக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் 70 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்போது அடுத்தாண்டு மத்தியில் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும். 

கோவிட் பெருந்தொற்று குறித்து சீனா கூடுதல் தகவல்களை தர வேண்டும். இது எதிர்காலத்தில் பெருந்தொற்றை சமாளிக்க உதவியாக இருக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஐரோப்பாவில் பிரான்ஸ் ,ஜெர்மனி ஆகிய  நாடுகளில் ஒமிக்ரான்  தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.