நாட்டில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளதால், பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் உலக மக்களின் பீதிக்கான சமீபத்திய காரணமாக உருவெடுத்து வருகிறது.  கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. 

இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.  இந்தியாவிலும் ஓமிக்ரான் வகை தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் மாறுபாட்டால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சதமடித்துள்ளது.

இந்த ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று  தெரிவித்துள்ளது.

Omicron variant india

கடந்த 2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமிக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தெலுங்கானா, தமிழகம் என பரவியது. 

நேற்று வரையில் நாடு முழுவதும் 82 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.  

அதிகபட்சமாக மராட்டியத்தில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கோவிட் 19 எனும் கொரோனா தொற்று டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாறி வந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் என தனது மரபணுவை மாற்றிக் கொண்டு உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

இந்தியாவில் 101 பேர் பாதிக்கப்பட்டநிலையில் இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர், மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர், கொரோனா தடுப்புக்குழுத் தலைவர் என மூவரும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், “உலகின் 91 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. டெல்டா வகை கொரோனா பரவல் குறைவாக காணப்பட்ட தென் ஆப்பிரிக்க நாட்டில், ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சமூகப் பரவலாக ஒமிக்ரான் மாறுமேயானால் டெல்டாவை விட அதிகமாகப் பரவும். டெல்டா வகை மாறுபாட்டை விட ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000-க்கும் கீழ் உள்ளது. 

இதில் 40 சதவிகித பங்கு கேரளாவுடையதாகும். தற்போது ஒமிக்ரான் வகை தொற்று 11 மாநிலங்களில் 101 பேருக்கு இருப்பதாக பதிவாகியுள்ளது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாது என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. 

omicron india

உலகளவில் இந்தியாவில்தான் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவை விட 4.8 மடங்கும், பிரிட்டனை விட 12.5 மடங்கும் அதிகமாக தடுப்பூசிகள் போடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வாலை தொடர்ந்து பேசிய ஐ.சி.எம்.ஆ. இயக்குநர் பல்ராம் பார்கவா பேசுகையில், “முக்கியத்துவம் இல்லாத பயணங்களை இந்த காலக்கட்டங்களில் பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது.

பொது இடங்களிலும், முக்கிய இடங்களிலும் கூட்டம் கூடுவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். புத்தாண்டு மற்றும் பண்டிகைகளை பொதுமக்கள் கவனத்துடன் கொண்டாட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பியி நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்தார்.