அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்த சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன என்பது தான், தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி கொரோனா சிகிச்சை முடித்து, நேற்று காலை 7.55 மணி அளவில் பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார். சென்னை வரும் வழி நெடுகிலும் சசிகலாவின் ஆதரவாளர்கள் திரண்டு நின்று, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பெங்களூரில் இருந்து காரிலேயே பயணித்து வந்த சசிகலா, இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை பூந்தமல்லிக்கு வருகை தந்தார். அந்த அதிகாலை நேரத்திலும் அங்கு திரண்டு நின்ற ஏராளமான தொண்டர்கள், அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து சென்னை போரூர் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, காலை 4.30 மணிக்கு எம்ஜிஆர் வாழ்ந்த இல்லமான ராமாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு நிறுவப்பட்டு இருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த எம்ஜிஆர் சிலையானது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா அதிமுக வின் பொதுச் செயலாளராக ஆன போது நிறுவப்பட்டதாகும். இதையடுத்து, அதே வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டிற்குச் சென்ற சசிகலா, அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் வாழ்ந்த இல்லமான ராமாபுரம் தோட்டத்தில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்ட சசிகலாவுக்கு, கிண்டி கத்திபாரா, சின்னமலை, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்ட முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து காலை 6.25 மணிக்கு சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டிற்கு வருகை தந்தார். 

இப்படியாக, பெங்களூரில் இருந்து புறப்பட்ட சசிகலா, சுமார் 23 மணி நேரம் பயணம் செய்த சென்னை வந்து சேர்ந்த அவருக்கு, வீட்டில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட பசுமாட்டிற்கு, கோமாதா பூஜை செய்து சசிகலா வழிபட்டார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சமையல் செய்த ராஜம் என்கிற பெண்மணி, தனது குழுவினருடன் தற்போது இளவரசி வீட்டுக்கு வருகை தந்து சசிகலாவுக்கு சமையல் செய்து கொடுக்கிறார். 

குறிப்பாக, சசிகலா இனி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குள்ளும் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தற்போதைய சூழலில் அதாவது இன்றும், நாளையும் அவர் வெளியே எங்கேயும் செல்லாமல், வீட்டிலேயே ஓய்வு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சசிகலா சென்னை வரும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவின் பொது எதிரி ஆட்சிக் கட்டிலில் அமராமல் தடுக்க, ஒரே அணியாக செயல்படுவோம் என்றும், எம்ஜிஆர், ஜெயல‌லிதா வழியில் ஒரே அணியாக நாம் செயல்படுவோம்” என்றும், ச‌சிகலா கூறினார்.

இதனால், அதிமுகவில் இணைந்து பணியாற்ற சசிகலா விரும்புவதாகவும், அது தொடர்பான பணிகளை அவர் இனிமேல் செய்வார் என்றும், அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், சென்னை வந்துள்ள சசிகலா, விரைவில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, “சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும், சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும்” என்றும், டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டதுள்ளது.