“தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என்று, ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா சரவெடியாகப் பேசி உள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டு காலமாகப் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் இருந்த சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு பங்களாவில் சசிகலா தனிமைப்படுத்தப்பட்டார். 

இந்த நிலையில், இன்று காலை 7.45 மணிக்கு பெங்களூரு சொகுசு விடுதியிலிருந்து புறப்பட்ட சசிகலா, இன்று பிற்பகல் நேரத்தில் தமிழகம் வந்தடைந்தார். 

தற்போது அவர் சென்னை வந்துகொண்டிருக்கும் சூழலில், வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது, தமிழகப் பகுதியான வாணியம்பாடியில் காரில் இருந்தபடியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “அன்புக்கு நான் அடிமை!” என்று, சூளுரைத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் பண்புக்கு நான் அடிமை!” என்றும், குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் நான் அடிமை. ஆனால், அடக்கு முறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்று, சரவெடியாக வெடித்தார். 

அப்போது, அங்கு கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்துப் பேசிய சசிகலா, “தொண்டர்கள் என்னைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் குறிப்பிட்டார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “கட்சியைக் கைப்பற்றுவீர்களா?” என்று, கேட்டார்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய சசிகலா, “மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன். அப்போது, நான் சொல்கிறேன்” என்று, கூறினார்.

ஆனால், செய்தியாளர்கள் விடாமல் அடுத்தடுத்து கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சசிகலா, “தொடர்ந்து நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். என்னுடைய செயல்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்” என்று, சூளுரைத்தார். 

குறிப்பாக, “ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது” தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய சசிகலா, “இதை எல்லாம் தமிழக அரசு ஏன் செய்கிறது? என்று, தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று தெரிவித்தார். 

அத்துடன், “அதிமுக கட்சி கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பது அவர்களின் பயத்தை காட்டுகிறது என்றும், ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்” என்றும், சசிகலா தெரிவித்தார். சசிகலாவின் இந்த பேட்டி, அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.