சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக வெடி வெடித்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து தற்போது விடுதலையாகி சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சசிகலாவை பெங்களூரூவிலிருந்து வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 

காலை 7.30 மணி அளவில் பெங்களூரூவிலிருந்து சென்னை புறப்பட்ட நிலையில், சசிகலா தற்போது தமிழகத்தை வந்தடைந்தார். இதனால், வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஓசூர் வந்த சசிகலா வரவேற்பை ஏற்று முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அந்த கோயிலுக்கு வந்ததும், அதிமுக துண்டு அணிந்தவாறு முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு, அவர் அங்கிருந்து மீண்டும் தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

அதே நேரத்தில், தமிழகத்திற்குள் வந்துள்ள சசிகலாவிற்கு சென்னை வரும் வழியில், வழி நெடுக கிட்டத்தட்ட 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் முன்ஏற்பாடுகளை செய்து உள்ளனர். 

அதன் படி, தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் சசிகலா கார் வந்த உடன், அவரை வரவேற்க தொண்டர்கள் முண்டியடித்து சென்றதால், அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி சுங்கசாவடியில் சசிகலாவை வரவேற்கும் விதமாக வெடி வெடித்து, அக்கட்சியினர் கொண்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெடியின் தீப்பொறியானது, எதிர்பாரத விதமாக அருகில் நின்றுக் கொண்டிருந்த இரு கார்கள் மீது விழுந்து உள்ளது. 

அப்பேர்து, கார் முழுக்க பட்டாசு இருந்ததால், தீப்பொறி பற்றிய நிலையில் கார் முழுக்க தீ பரவி உள்ளது. இதை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள், அதில் ஒரு கார் பெரும்பாலும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு கார் லோசகா எரிந்துகொண்டிருக்கும் போதே அணைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பெங்களூருவில் இருந்து சென்னை வந்துகொண்டிருக்கும் சசிகலாவிற்கு, கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பும் வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் சிறப்பான முறையில் தொடர்ச்சியாக வரவேற்பு அளித்த வண்ணம் உள்ளனர். அப்போது, காரில் வந்துகொண்டிருந்த சசிகலாவை பார்த்து குஷியான சிறுவன் ஒருவன், சசிகலாவுக்கு டாட்டா காட்டிய செல்ஃபியும் எடுத்து கொண்டார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே போல், சசிகலா காரில் வந்து கொண்டிருந்த போது, அவரை துரத்தியபடி இருச்சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், காரை வழிமறித்து செல்ஃபி எடுக்க முயன்றார். அவரை சசிகலாவின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், காரில் இருந்த சசிகலா, போட்டோ எடுக்க அனுமதி வழங்கினார். இதனையடுத்து, அந்த இளைஞர் சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.