போயஸ்கார்டனில் வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வீடியோக்கடை வைத்து நடத்திய சசிகலாவுடன் எப்படி இணைந்தார் என்ற கதையை தற்போது பார்க்கலாம்..

தமிழ் சினிமாவின் திரைவானில் தனியொரு நட்சத்திரமாக ஜெயலலிதா மின்னியது 60 களின் கால கட்டம் அது. அப்போது, சசிகலாவுக்கும் - ஜெயலலிதாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

ஆனால், கடந்த 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் கவனமானது ஜாதகம், ஜோதிடம், மாந்தீரிகம் பக்கம் திரும்பி, அது தொடர்பான சிந்தனைகளில் மூழ்கிப்போய் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அப்போதைக்குத் தான், ஜெயலலிதாவின் அரசியல் பயணமும், ஜெயலலிதா உடன் சசிகலா நெருங்கியதும், ஜோதிடம், ஜாதகத்தில் ஜெயலலிதாவுக்கு அதீத நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது என்ற மூன்று தருணங்களும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் என்று, அதிமுகவில் விபரம் அறிந்தவர்கள் கூறும் செய்தியாக இருக்கிறது. 

அதாவது, 1984 ஆம் ஆண்டுகளில் “வினோத் வீடியோ விஷன்” என்கிற பெயரில் வீடியோ கடையை வைத்து நடத்தி வந்தார் சசிகலா. 

சசிகலாவின் வாழ்க்கையில் ஜெயலலிதாவை இணைத்து வைத்தது அந்த வீடியோ கடை தான் என்கிறார்கள் என்கிறார்கள் அதிமுகவின் முன்னோடிகள்.

சசிகலா, வீடியோக்கடை நடத்தி வந்த நேரத்தில், அவரது கணவர் நடராஜன் கடலூர் மாவட்ட அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அதன் மூலம் கடலூர் ஆட்சியர் சந்திரலேகாவுக்கு சசிகலா அறிமுகம் ஆனார். அந்த நேரத்தில் தான், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்ற காலம் அது. அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப் பயணங்களை வீடியொ படமெடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வீடியோ கடைக்கு கிடைத்தது. அதன் மூலமாகத்தான், ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகம் ஆனார். அதன் பிறகு தான் சசிகலாவின் வாழ்க்கையே திசை மாறியது.

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற சசிகலா, ஜெயலலிதா உடனே தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினார். அப்போது தொடங்கிய அந்த பயணம், ஜெயலலிதாவின் இறுதிக் காலம் வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்திலும் கூட சசிகலா, ஜெயலலிதாவின் நிழலாகவே இன்று வரை அறியப்பட்டு வருகிறார். 

முக்கியமாக, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய ஆதரவாகவும், நம்பிக்கையாகவும், பக்க பலமாகவும் கூடவே இருந்தது சசிகலாவும் அவரது குடும்பமும் தான். 

அதன் பிறகு, “ஜெயலலிதா - சசிகலா” என்ற நட்பு இன்னும் நெருக்கமானது. சசிகலாவின் உறவினர் சுதாகரனை, தத்துப்பிள்ளையாக ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த நட்பானது இன்னும் இறுகியது. அதன் பின்னர், போயஸ் கார்டன், அதிமுக, தமிகழ அரசியல் என்று ஜெயலலிதாவின் அனைத்து விசயங்களிலும் சசிகலா துளியும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவே வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில், தமிழக அரசியலில் “சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன்” என்கிற நிலையில் ஜெயலலிதா இருந்தார். இதனை யாரும் 
மறுக்க முடியாது.

“ஒரு சாதாரண பெண்ணாக வந்த சசிகலாவை, ஜெயலலிதா இவ்வளவு தூரம் நம்புவதற்கு, ஜாதகமும், மந்திரங்களும் தான் மிக முக்கிய காரணம்” என்று சொல்கிறவர்களும் உண்டு. 

குறிப்பாக, கடந்த 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, சசிகலா தவிர்க்க முடியாத நபராக அதிமுகவில் வலம் வந்தார்.

அதிமுகவின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் ஜெயலலிதா உடன் சசிகலாவும் கூடவே இருந்தார். அரசியல் முடிவுகள் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டாலும், முடிவுக்குப் பின்னால் சசிகலாவின் ஆலோசனையோ பிரதானமாக வேர் ஊன்றி இருந்தது. 

அதே நேரத்தில், சசிகலாவின் நெருக்கமே ஜெயலலிதாவுக்கு சில பின்னடைவுகளையும் கொடுத்தது. சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மீதான பல குற்றச்சாட்டுகள் நேரடியாக ஜெயலலிதாவைப் பாதித்து.

இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சசிகலாவை ஒதுக்கி வைக்கப்படவும் செய்தார். ஆனால், அவையெல்லாம் தற்காலிகமாகவே இருந்தது. 

அதன் பிறகு, பல்வேறு வழக்குகள், சிறைவாசம் என்று பல துயரங்களிலும் ஜெயலலிதாவை விட்டு விலகாமல் கூடவே அதீத நம்பிக்கையைப் பெற்று கடைசி வரை நின்றார் சசிகலா. ஆனால், ஜெயலலிதாவின் உயிரிழப்பிற்குப் பிறகு தமிழக அரசியலில் காட்சிகள் அப்படியே மாறின.

தற்போது, 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்றுவிட்டு, விடுதலை ஆகி சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைச் சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.